பக்கம்:பொன் விலங்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

99

அவன் போய்விட்டு வந்த மல்லிகைப் பந்தல் ஊரைப் பற்றியும் அந்த ஊர்க் கல்லூரி வேலையைப் பற்றியும் பெண்களுக்கு இயல்பாகக் கேட்கத் தோன்றும் சில கேள்விகளால் அம்மாவும், அவனை விசாரித்தாள். "மல்லிகைப் பந்தல் கல்லூரியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? எவ்வெப்போதெல்லாம் விடுமுறைக்கு மதுரைக்கு வரலாம்? அந்த வேலையில் மேற்கொண்டு முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி உண்டா? -என்பவற்றைப் போல் சாரமில்லாதனவும், அந்த வேலை நிச்சயமாகக் கிடைத்துவிடும்போல் பாவித்துக் கொண்டு கேட்கப்பட்டனவுமாகிய பேதைத் தன்மை நிறைந்த அம்மாவின் கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக மறு மொழிகளைச் சொன்னான் சத்தியமூர்த்தி.

"என்ன? பதில் பேசாமல் இருக்கிறாய்?" என்று இரண்டாம் தடவையாகவும் அம்மா அழுத்திக் கேட்டபோது, "கிடைத்துவிடும் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா!" என்று பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அதற்குப்பின்பு அம்மா அடுப்புக் காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டாள். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி எல்லாரும் விசாரிக்கிற அக்கறையைப் பார்த்தால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதும் நம்புவதும் அவனுக்குத் தெரிந்தது. ஏமாற்றத்தை ஏற்கவும் தாங்கிக்கொள்ளவும் அதற்கு ஆளாகிறவன் தயாராக இருந்தாலும் அவனைச் சுற்றியிருக்கிறவர்கள் தயாராயிருக்க விரும்பாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. தான் இப்போது இருக்கிற சூழ்நிலை அப்படிப்பட்டதென்று சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்திருந்தான். அப்போது இன்னோர் எண்ணமும் அவனுக்குத் தோன்றியது. தான் நலமாக ஊர் திரும்பி வந்து சேர்ந்ததைப் பற்றியும், 'இன்டர்வ்யூ'வின் போது அன்பாகவும், பரிவுடனும் நடந்து கொண்டதற்கு நன்றி சொல்லியும் பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன? என்று நினைத்தான். அடுத்த கணமே 'அப்படி எதற்காக எழுத வேண்டும்?' என்ற தயக்கமும் ஏற்பட்டது. நன்றி சொல்வதைச் சிலர் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள். இந்த நன்றியைச் சொல்வதனால் இன்னும் வேறு எந்த உதவியை எதிர்பார்க்கிறார்களோ என்று பயந்து நன்றியை ஏற்றுக்கொள்ளவே தயங்குகிறவர்களும் இருப்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். நன்றி என்ற குணத்தின் மானத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/101&oldid=1355966" இலிருந்து மீள்விக்கப்பட்டது