பக்கம்:பொன் விலங்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பொன் விலங்கு


காப்பாற்ற வேண்டுமானால் இப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்வதை நிறுத்திவிட வேண்டும். இதில் பூபதி அவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று அந்த ஒரு நாள் பழக்கத்தில் அவனால் தீர்மானம் செய்ய முடியவில்லை.

காலை பத்து மணிக்குக் கிணற்றடியில் குளிக்கப் போனவன்அப்போதும் பூபதிக்குக்கடிதம் எழுதுவதாவேண்டாமா என்ற இதே சிந்தனையில்தான் இருந்தான். அப்பா டியூஷன் வீடுகளுக்குச் சென்றுவர வெளியே போயிருந்தார். அவர் திரும்பி வந்து மறுபடியும் இதைப் பற்றிப் பேச்சைத் தொடங்கினால் என்ன செய்வதென்று திகைப்பாகவும் இருந்தது அவனுக்கு. அந்த நிலையில் நண்பர்கள் யாராவது தேடிவர நேர்ந்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் கூட நல்லதென்று நினைத்தான் அவன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நண்பர்கள் எவரும் அப்போது அவனைத் தேடிவரவில்லை. வெளியூரிலிருந்த நண்பர்கள் இருவரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவன் குளித்துக்கொண்டிருந்தபோதே முதல் தபாலில் அந்தக் கடிதங்கள் வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. தங்கை ஆண்டாள் தபால்காரனிடமிருந்து அவற்றை வாங்கிக்கொண்டு வந்து வைத்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு ஈர உடையைக் களையாமலே கடிதங்களை ஆவலோடு பிரித்தான் சத்தியமூர்த்தி. அவனைப் பொறுத்தவரை அப்போதிருந்த மனநிலையில் இரண்டு கடிதங்களிலுமே சுவையில்லாத செய்திகள்தான் நிரம்பியிருந்தன. 'ஏதாவதொரு கல்லூரியில் விரிவுரையாளராயிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து எழுதினால் உனக்கு இருக்கிற பொது அறிவுக்கும் புத்திக்கூர்மைக்கும் நிச்சயமாகத் தேறி விடுவாய்' என்று சத்தியமூர்த்திக்குப் பிழைக்கும் வழியை உபதேசம் செய்திருந்தான் ஒரு நண்பன். பணக்கார வீட்டில் ஒற்றைக்கொரு பிள்ளையாகப் பிறந்து, அந்த வீட்டின் முடிசூடா இளவரசனாக இருந்து வரும் இன்னொரு நண்பனோ காஷ்மீருக்கு உல்லாசப் பிரயாணம் புறப்பட இருப்பதாகவும் சத்தியமூர்த்தியும் உடன் வந்தால் தன் செலவில் அழைத்துப் போகத் தயாராயிருப்பதாகவும் எழுதியிருந்தான். படித்துக் கடிதங்களை வைக்கும்போது சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு தான் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/102&oldid=1355991" இலிருந்து மீள்விக்கப்பட்டது