பக்கம்:பொன் விலங்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101

"ஒரு நண்பன் வாழ வழி சொல்லிக் கொடுத்திருக்கிறான். இன்னொரு நண்பனோ வாழ்க்கையை அநுபவிக்க ஆயிரம் மைல் பயணம் செய்து போய்வரலாம் என்று அழைக்கிறான் எனக்கென்ன குறை?"-என்று பாதி வேதனையாகவும் பாதி வேடிக்கையாகவும் முணுமுணுத்தபடி உடைமாற்றிக் கொண்டுவர உள்ளே சென்றான் அவன்.

திரும்பி வந்து பன்னிரண்டு பன்னிரண்டரை மணிவரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் படித்ததை அசைபோட்டு சிந்திப்பதில் சிறிது நேரம் கழிந்தது. அதற்குள் அப்பா வெளியிலிருந்து திரும்பி வந்தார். பகல் உணவுக்கு இரண்டு பேரும் சேர்ந்துதான் உட்கார்ந்தார்கள். சாப்பிடும்போது தந்தை தன்னிடம் ஏதாவது பேசத் தொடங்குவார் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. சாப்பிட்டு முடித்துக் கை கழுவுகின்றவரை இருவரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவே நேரமில்லை. வாயிலில் இரண்டாவது மெயில் தபால்காரன் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்லி ஓர் உறையை உள்ளே எறிந்துவிட்டுப் போனான். இப்போதும் ஆண்டாள்தான் போய் எடுத்து வந்தாள்.

"இதென்ன அண்ணா? மல்லிகைப் பந்தல் ஊரிலிருந்து வருகிற கடிதம்கூட மல்லிகைப் பூமணம் மணக்கும் போலிருக்கிறதே?" என்று தங்கை அந்தக் கடித உறையைக் கொடுத்தபோது சத்தியமூர்த்தி அதைக் கையில் வாங்கியதுமே அந்த வாசனையை உணர்ந்தான். ஒருவேளை ஆர்டராக இருக்குமோ?...' என்ற பாவனையில் அப்பா அவன் முகத்தை ஆவலோடு நிமிர்ந்து பார்த்துத் தயங்கினார். உறையும் கிழியாமல் உள்ளே இருப்பதும் கிழியாமல் இரண்டு நூலிழை அளவுக்கு ஓர் ஒரமாக உறையைக் கிழித்து உள்ளே இருந்ததை எடுத்தான் சத்தியமூர்த்தி. கடித மடிப்பினிடையே மலர்ந்த புதுமையோடும் இல்லாமல் நன்றாக வாடியும் இல்லாமல் நசுங்கி வதங்கி மணக்கும் குடைமல்லிகைப் பூக்கள் இரண்டு இருந்தன. சத்தியமூர்த்தி ஆச்சரியமடைந்தான். உறையில் குண்டு குண்டாக எழுதியிருந்த முகவரி எழுத்துக்களைப் பார்த்தபோதே அது கல்லூரி ஆர்டராக இருக்க முடியும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/103&oldid=1356009" இலிருந்து மீள்விக்கப்பட்டது