பக்கம்:பொன் விலங்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

107

அந்தப் பனித்துளிகளும் பசும்புல் வெளியும் தம்முடைய அந்த நேரத்து அழகால் அவளைக் கவர முடிந்தது. ஏதோ ஒரு நினைவால் சிறப்பாகவும் நிரந்தரமாகவும் கவரப்பட்டுவிட்ட ஒரு மனம் அவ்வப்போது சாதாரணமாய்க் கவரப்படும் பல நினைவுகளாலும் கூடத்தான் ஆண்டு அநுபவிக்க விரும்புகிற அந்த ஒரு நினைவே ஞாபகப்படுத்தப் பெறும். முதல் நாள் மாலை அவசரம் அவசரமாக அந்தக் கடிதத்தை எழுதி எடுத்துக் கொண்டு போய்த் தானே தபாலில் சேர்த்ததையும், அந்தக் கடிதத்தைப் பதறும் கையினால் தபால்பெட்டியில் போட்டுவிட்டுப் பின்னால் யாரோ வந்து நின்று தன்னைக் கவனிப்பதுபோல் தோன்றவே திரும்பிப் பார்த்தபோது, "என்னைக் கூப்பிட்டுக் கொடுத்திருந்தால் நானே தபாலில் சேர்த்திருப்பேனே? நீங்கள் எதற்காகச் சிரமப்படுகிறீர்கள்?" என்ற கேள்வியோடும் தபாலில் சேர்ப்பதற்காக வைத்திருந்த வேறு கடிதங்களோடும் கல்லூரி ஹெட்கிளார்க் நின்று கொண்டிருந்ததையும் இப்போது மீண்டும் நினைவுகூர்ந்தாள் பாரதி. முகவரி எழுதியிருந்த பக்கம் வெளியே தெரியும்படி தான் கடிதத்தைத் தபால் பெட்டிக்குள் போட்டதையும், திறந்திருந்த பெட்டியில் கீழ்ப்பக்கமாக அது வந்து விழுந்ததையும், ஹெட்கிளார்க் பின்புறம் நின்றபடியே படித்துப் பார்த்திருப்பாரோ என்ற பயமும் திகைப்பும் நேற்று இரவே வெகுநேரம்வரை அவள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. இன்று காலை இப்போது இரண்டாவது முறையாக அந்த நினைவு வந்த போதும் "ஹெட்கிளார்க்" தபாலில் சேர்ப்பதற்காகக் கொண்டு வந்திருந்த கடிதங்களில் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்த அந்த முதியவருக்கு அனுப்பப்படும் ஆர்டரும் இருக்குமோ என்ற அநாவசியமான பீதி வேறு அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரி ஹெட்கிளார்க் சிதம்பரம் ஏறக்குறையக் கல்லூரி முதல்வரின் வார்த்தைக்குத் தலையாட்டுகிறவர் என்பதும் அவளுக்குத் தெரியும். தான் தபால் பெட்டியில் போட்ட கடிதத்தில் சத்தியமூர்த்தியின் முகவரி எழுதப்பட்டிருந்ததை ஹெட்கிளார்க் படித்திருந்தால் அதை நிச்சயமாகக் கல்லூரி முதல்வரிடம் சொல்லுவார் என்பதையும் அவளால் அனுமானம் செய்ய முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/109&oldid=1356112" இலிருந்து மீள்விக்கப்பட்டது