பக்கம்:பொன் விலங்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

9

"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன்மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

- என்று மண்ணை வாழ்த்திப் பாடியிருக்கிறாளே, தமிழ் மூதாட்டி - அந்த வாழ்த்து மல்லிகைப் பந்தலுக்கு முற்றிலும் பொருந்தும். காடாரம்பமான அந்த மலைநாட்டு நகரம் ஆரவார வேகங்களிலிருந்தும் பரபரப்பான ஆடம்பரங்களிலிருந்தும் விலகி ஒதுங்கியிருந்தாலும், நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் இருப்பிட மாக விளங்கியது

நாகரிகம் பெரிய பெரிய நகரங்களிலிருந்து பிறந்து வளர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது இன்றைய நகரங்களின் நெருக்கடியில் இருப்பதற்கு இடமில்லாமல் புறக்கணிக்கப்பட்டு மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய அமைதியான ஊர்களில் ஒதுங்கிப் புகலிடம் பெற்றிருந்தது.

மல்லிகைப் பந்தலில் வாழ்க்கை இயந்திரமாக ஒடிக் கொண்டிருக்காது; நிதானமாக நடந்து கொண்டிருக்கும். தார் ரோடுகளும், சிமெண்டுப் பூச்சுக்களும் தரையை மூடி மண்ணின் ஈர வாசனையைத் தடை செய்ய மாட்டா. எல்லா இடங்களிலும் ஈர மண்ணின் மணம் தன் சகலவிதமான வளங்களோடும் எக்காலமும் மணந்துகொண்டிருக்கும். காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தாகத்தோடு அங்கு மனிதர் தேவைகளுக்கு மீறிய பரபரப்புக் கொண்டு திரிய மாட்டார்கள். காரியங்கள் நியாயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், நாணயத்தோடும் நிதானமாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஊர் மக்களைப் போலவே எவரையும், எப்போதும் வாட்டவோ, காயவோ விரும்பாதது போல் ஆண்டு முழுவதும் ஒரேவிதமான குளிர்ந்த சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்கும். இத்தகைய அழகிய ஊரை இன்னும் அழகுபடுத்துவது போல் தொழிலதிபர் பூபதி ஒரு சிறந்த கலைக் கல்லூரியை அங்கு நிறுவி வளர்த்திருந்தார். எங்கோ ஒதுக்குப் புறமான மலைகளுக்கு நடுவே உள்ள ஊரில் அமைந்திருந்தாலும் படிப்பின் தரத்தினாலும் கல்வியைப் பரப்பும் உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/11&oldid=1405621" இலிருந்து மீள்விக்கப்பட்டது