பக்கம்:பொன் விலங்கு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பொன் விலங்கு

"நிரம்ப வேண்டிய சிநேகிதி ஒருத்திக்குத் தபாலில் எழுத வேண்டியிருந்தது. எப்படியும் இன்றைக்கு அவசரமாகச் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக நானே எழுதி எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன்" என்று நேற்று மாலை ஹெட்கிளார்க்கினிடம் பதில் சொல்லியிருந்தாள் அவள்.

அதற்கு அப்புறமும், "ஏதோ கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்காக நீயே இந்த மழை ஈரத்தில் நடந்து வெளியே போயிருந்தாயாமே அம்மா? இந்த மழை ஈரத்தில் நீயே எதற்காக வெளியே போகிறாய்? உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டால் என்ன ஆவது? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கக் கூடாதோ?" என்று இரவு சாப்பிடும்போது அப்பாவும் அவளைக் கேட்டிருந்தார். 'ஹெட்கிளார்க்தான் அப்பாவிடம் அதைச் சொல்லியிருக்க வேண்டும்' என்று அவள் தெரிந்து கொண்டாள். இந்தக் கேள்வியை நேற்றிரவு தந்தை தன்னிடம் கேட்டபோது தன்னுடைய செளகரியங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விநாடியும் கவனித்துக் கொண்டிருப்பதையும், விசாரிப்பதையுமே துன்பமாக உணர்ந்தாள் அவள். காலையில் உறக்கம் விழித்துப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு முதல்நாள் நினைவுகளில் மூழ்கியிருந்தவள், கண்கள் சென்ற திசையில் தெரிந்த தோட்டத்துப் புல்வெளியையும் அதில் வைரக் கற்களாக மினுக்கும் பனித்துளிகளையும் அதற்கப்பால் இயற்கையின் ஏதோ ஒரு விதமான சந்தோஷத்தை வெளியிடும் சின்னங்களாகப் பூத்துக் குலுங்குகிற பலவகைச் செடி கொடிகளையும் இரண்டாவது தடவையாகப் பார்த்தாள். தோட்டமும் வீடுமாகப் பன்னிரண்டு ஏக்கர் பரப்புள்ள அந்தப் பங்களாவின் காம்பவுண்டு அமைப்புப் பெரிதாக இருந்த காரணத்தினாலும், மலைப்பகுதியாக இருந்ததனாலும் உள்ளே பெரும்பகுதிகள் வெள்ளைக்காரர்களின் வீடுகளைப் போல் கண்ணாடிகளால் தடுக்கப்பட்டிருந்தன. பெரிய கண்ணாடி பலகணிக்கு மறுபுறம் மங்கித் தெரிந்த தோட்டம் யாரோ தயாராக எடுத்து நிறுத்திக் கண்ணாடி போட்ட புகைப்படம் போல் வனப்பின் நிறைவாகத் தெரிந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/110&oldid=1356138" இலிருந்து மீள்விக்கப்பட்டது