பக்கம்:பொன் விலங்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

109

பல் விளக்குவதற்காக வாஷ்பேஸினுக்கு முன்னால் போய் நின்றபோது மேலேயிருந்த கண்ணாடியில் தான் தினசரி பார்த்துப் பார்த்துப் பழக்கமான தன்னுடைய முகத்தையே புதுமையாகப் பார்த்தாள் பாரதி. சத்தியமூர்த்தியிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்தபோதும் இந்த முகம் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும் என்ற மகிழ்ச்சிகரமான சந்தேகம் அவள் மனதில் இப்போது ஏற்பட்டது. 'சத்தியமூர்த்தியின் கண்களுக்குத் தான் எவ்வெப்போது எந்தெந்த விதங்களில் அழகாகத் தோன்றியிருக்க முடியும்?' என்ற எண்ணத்தோடு சிறிது நேரம் தன் கண்களை மறந்து அவனுடைய கண்களாகவே தன்னுடையவற்றைப் பாவித்துக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து மகிழ முயன்றாள் அவள். நேற்று அவருக்கு முன் மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய் நாணி நின்றபோதும் என்னுடைய இந்தக் கண்கள் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும்? ஊதுவத்தியிலிருந்து எழுந்து சுழலும் புகைச் சுருள்களைப்போல் இந்தக் கூந்தலும் இப்படித்தானே சுருண்டு சுழன்று கருமை மின்னியிருக்கும்?' என்று ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினாள் அவள். தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஞாபகம் ஒரு பெண்ணுக்குத் தன் இதயம் அழகனாக ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்புதான் நிச்சயமாகவும், தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது. வார்த்தைகளால் அப்படி அப்படியே சொல்லி விளக்கிவிட முடியாததொரு நுணுக்கமான அநுபவம் இது. ஒவ்வொரு பெண்ணும் இத்தகைய அநுபவங்களின் போதுதான் தன்னுடைய நினைப்பும் பாவனைகளும் மலர்ந்து மணக்கிறாள். தன்னைவிட அழகான பொருளை எதிரே சந்திக்கும் போதிலேயே தான் அழகாயிருக்க வேண்டும் என்ற ஞாபகமும் தவிப்பும் ஏற்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிகளாலும், பாவனைகளாலும் தவிக்கிற தவிப்பே ஓர் அழகாகி விடுகிறது. அந்தத் தவிப்பில் நேரம் போவதே தெரிவதில்லை. அப்படித் தவிப்பதே ஒர் இன்பமாக - ஓர் அழகாகத் தோன்றுகிறது.

குளியலறையில் பல் விளக்கி முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்து நேரத்தைப் பார்த்தபோதுதான் குளிப்பதற்குச் செலவிட வேண்டிய அவ்வளவு அதிகமான நேரத்தைத் தான் பல் விளக்குவதற்குச் செலவழித்திருப்பது பாரதிக்கே தெரிந்தது. மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/111&oldid=1356154" இலிருந்து மீள்விக்கப்பட்டது