பக்கம்:பொன் விலங்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பொன் விலங்கு

இலயித்து ஈடுபடுகிற ஒன்றில் நேரமே தெரியாது என்பதைப் புரிந்து கொண்டவளாகக் கூடத்துக்குப் போனாள் அவள். கூடத்தின் நடுவேயிருந்த தேநீர் மேஜையில் எல்லாம் தயாராயிருந்தன. அப்பா காலையில் வெளிவந்த செய்தித் தாள்களில் மூழ்கியிருந்தார். செய்தித் தாள் முழுமையும் ஒரே எண்கள் மயமாக அச்சாகியிருந்தது. ஏதோ பரீட்சை ரிஸ்ல்ட் வந்திருந்தது போலும், அருகே போய் உட்கார்ந்து தந்தையின் உடல் நிலையை விசாரித்துக் கொண்டே இருவருக்கு மாகத் தேநீரைக் கலக்கத் தொடங்கினாள் பாரதி. அன்று விடிந்ததிலிருந்து தந்தை மிகவும் உற்சாகமாக இருப்பதை அவருடைய பேச்சிலிருந்து அவள் தெரிந்துகொள்ள முடிந்தது.

'இப்போதெல்லாம் நீ மிகவும் நேரம் கழித்து எழுந்திருக்கிறாய் போல் இருக்கிறதம்மா! நானும் ஆறேகால் மணியிலிருந்து இந்த நாற்காலியில் பழியாய்க் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு செய்தித் தாளையும் இரண்டு தடவை எடுத்துப் படித்தாயிற்று. பழகிவிட்ட காரணத்தால் நீ கலந்து கொடுக்காமல் தேநீர் குடிக்கவும் மனம் வரவில்லை. இன்று என் உடல்நிலையும் ஒரளவு தேறியிருக்கிறது. 'மயிலாடும் பாறை எஸ்டேட்' வரை போய்வரலாம் என்று நினைத்தேன். உன் அபிப்பிராயம் எப்படி? எஸ்டேட் வேலை கொஞ்சம் இருக்கிறது. அதோடு உன்னையும் அழைத்துப்போய் புதிதாக வாங்கிய பகுதிகளைச் சுற்றிக் காண்பிக்க ஆசை. ஒரு நாளோ, இரண்டு நாளோ, அங்கே தங்கியிருந்து வரலாம். கல்லூரி இன்டர்வ்யூக்களும் ஏறக்குறைய முடிந்துவிட்டன. சர்வகலாசாலை செனட் மீட்டிங் ஏதோ இருக்கிறதாம். பிரின்ஸிபல் இன்று மாலை சென்னைக்குப் போகிறார். திரும்பிவர ஒரு வாரமாகும்...அதுவரை கல்லூரி நிர்வாக வேலைகளைப் பொறுத்த மட்டும் எனக்கு ஓய்வுதான்."

"இந்த வருடம் புதிதாக நியமனம் செய்து அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் எல்லாம் பிரின்ஸிபல் ஊர் திரும்பிய பின்புதானே அப்பா?" என்று தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டிக்கொண்டே மெல்லக் கேட்டாள் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/112&oldid=1356168" இலிருந்து மீள்விக்கப்பட்டது