பக்கம்:பொன் விலங்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பொன் விலங்கு

விடுவதற்காகத்தான் அவள் அப்போது அந்தப் பேச்சையே தொடங்கினாள். தந்தையின் பதில் சிறிதும் நெகிழ்ச்சியின்றி வெளிப்பட்டதைக் கண்டபின்பே அவள் தன் பேச்சை மாற்றிக் கொண்டாள். அவரோ எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றியே அவளிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

“என்னம்மா இது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்கிறாயே?... எஸ்டேட் பக்கம் போய் வரலாமா என்று கேட்டேனே?" என்று மீண்டும் மகளைக் கேட்டார் பூபதி. வீடு வாசலை மறந்து மாதக் கணக்கில் எஸ்டேட்டில் இருக்கலாம் என்றாலும் உற்சாகமாக ஒப்புக்கொள்கிற பெண் இன்று மெளனமாயிருந்ததைக் கண்டு தந்தையும் வியப்படைந்தார். மல்லிகைப் பந்தலிலிருந்து நாற்பது - நாற்பத்தைந்து மைல் தொலைவில் இன்னும் உயரமான இடத்தில் இன்னும் அழகான மலைப் பகுதியில் பூபதிக்குச் சொந்தமான மயிலாடும் பாறை எஸ்டேட் அமைந்திருந்தது. நானூறு ஏக்கரோ நானூற்றைம்பது ஏக்கரோ ஒரு தனி மலையே அந்த இடத்தில் அவருக்குச்சொந்தமாக இருந்தது. எஸ்டேட்டின் நடுவே தேயிலையைப் பதனிட்டுத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் இருந்தது. மயிலாடும் பாறை மலையின் இயற்கையழகு மிகுந்த பகுதி ஒன்றில் சிறியதோர் அருவியை ஒட்டி ஓய்வு கொள்வதற்கு ஏற்ற வசதி நிறைந்த விடுதி ஒன்றையும் அமைத்திருந்தார் பூபதி. பதினைந்து இருபது நாட்களுக்கு ஒருமுறை அல்லது சில சமயங்களில் இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை தந்தையும் மகளுமாக இந்த விடுதிக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டு வருவதுண்டு. அப்படி வந்தால் ஒரு வாரமோ, பத்து நாளோ ஒய்வாகத் தங்காமல் திரும்புவது வழக்கமில்லை. மல்லிகைப் பந்தலுக்கும் மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கும் நடுவிலுள்ள நாற்பது மைல் மலைச் சாலையிலேயே பூபதிக்கு உடைமையான வேறுசில பெரிய தொழில் நிறுவனங்களும் இருந்தன.

அவருடைய எஸ்டேட்டில் விளையும் கோகோ காய்களைப் பயன்படுத்தி சாக்லேட் முதல் பல பண்டங்கள் செய்யும் இனிப்பு மிட்டாய்த் தொழிற்சாலையான 'கன்பெக்ஷனரி ' ஒன்றும், தேக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/114&oldid=1356202" இலிருந்து மீள்விக்கப்பட்டது