பக்கம்:பொன் விலங்கு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

115

பல தொல்லைகளை இப்படி நுணுக்கமான நகைச்சுவையினாலேயே சமாளித்து விட்டுத் தயங்காமல் மேலே நடந்து போய்க்கொண்டிருப்பார் பூபதி. அப்பாவின் குணங்களில் இந்த நகைச்சுவை குணத்தைப் பாரதி மிகவும் ஈடுபட்டு இரசிப்பாள். ஆனால் முன்புறத்து வாயில் வராந்தாவில் போய்ப் பார்த்தபோது தந்தையின் முகத்திலும் சிரிப்பு மறைந்தது; அவள் முகத்திலும் சிரிப்பு மறைந்து விட்டது. முற்றிலும் வேறான காட்சி ஒன்று அவர்களுக்காக அங்கே காத்திருந்தது. ஓரிரு விநாடிகள் ஒன்றுமே புரியாமல் அவர்கள் இருவரும் அஞ்சி மருண்டு போயினர். விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு காட்சியா?

பை ஓரமாக நெஞ்சின் மேல் ஓர் அரசிலை அளவுக்கு மாறிய நிறத்தில் பூ வேலை செய்த 'ஸ்லாக்' சட்டையும் பைஜாமாவும் அணிந்த இளைஞன் ஒருவன் வாராமல் கலைந்த தலையுடனும் வெறியுமிழும் சிவந்த கண்களுடனும் வலது கையில் பிச்சுவாக் கத்தியை ஓங்கிக் கொண்டு பாயத் திமிறியபடி கூர்க்கா காவற்காரர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டு நின்றான். பக்கத்தில் 'கல்லூரி ஹெட்கிளார்க்' பதறி நடுங்கிக் கொண்டு நின்றார். அவர் முகம் பேயறைபட்டது போல் இருந்தது.

"சார்! இன்றைக்கு மாலையில் தாம் சென்னைக்குப் புறப்பட வேண்டும் என்பதற்காகப் பிரின்ஸிபல் கல்லூரியில் சில முக்கியமான கடிதங்களை டைப் செய்வதற்காகவும் வேறு காரியங்களுக்காகவும் இன்று அதிகாலையிலேயே என்னை வரச்சொல்லியிருந்தார். அவரும் வந்திருந்தார், இருவரும் பிரின்ஸிபல் ரூமில் உட்கார்ந்து இன்று காலை செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கும் பி.எஸ்ஸி. ரிசல்ட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். திடுதிப்பென்று இந்தப் பையன் கத்தியும் கையுமாகப் பிரின்ஸிபல் அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு பாய்ந்து ஓடி வந்தான். இவன் பரீட்சையில் தேறவில்லையாம், அதற்குப் பிரின்ஸிபல்தான் காரணம் என்று இவனாக நினைத்துக் கொண்டு..."

"கதைசொல்லாதீர்..மேலே என்ன நடந்தது?..."- பூபதியின் குரல் ஹெட்கிளார்க்கிடம் இதைக் கேட்கும் போது இடிமுழக்கமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/117&oldid=1356239" இலிருந்து மீள்விக்கப்பட்டது