பக்கம்:பொன் விலங்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117

"ராஜாராமன்..."
"நீ எழுதிய பரீட்சை"
"பி.எஸ்ஸி......"
"நீ அதில் தேறாமல் போனதற்குக் காரணம்"

"பிரின்ஸிபல். காலேஜ் நாளிலிருந்து நான் வீழ்ச்சியடைய வேண்டுமென்று சதி செய்தார் அவர்..."

இதைச் செவியுற்றதும் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு அந்தப் பையனின் முகத்தையே துளைத்தெடுக்கும் பார்வையால் இமையாது பார்த்துக்கொண்டே நின்றார் பூபதி. அமைதியாகவும் உள்ளடங்கிய குரலுடனும் அந்த விநாடி வரை தமிழில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பூபதியின் குரல் திடீரென்று சிறிது நேர அமைதிக்குப் பின் கோப வெறியோடு ஆங்கிலத்தில் சிங்க முழக்கம் செய்யலாயிற்று. "ஆர் யூ நாட் அஷேம்டு டு பி எ ஸ்டுடெண்ட்?" (நீ ஒரு மாணவனாக இருப்பதற்கு வெட்கமாக இல்லை உனக்கு?) என்று கேட்டுவிட்டு அந்தப் பையனே வெலவெலத்துப் போய் அவன் கையிலிருந்த கத்தி நழுவி விழுமாறு ஓங்கி ஓர் அறைவிட்டார். பையன் கல்லூரி முதல்வரிடம் முரண்பட்டுத் திமிறினாற்போல் பூபதியை எதிர்த்துக் கொண்டு பாயவில்லை, அப்படியே மருண்டு நின்றுவிட்டான். அவருடைய கம்பீரமான தோற்றமும் எதிராளியைக் கட்டுப்படுத்தி நிறுத்தும் வார்த்தைகளும் அவனை நலிந்து நிற்கச் செய்திருந்தன.

"உன்னைப் போன்றவர்கள் பேனாவும் புத்தகமும் எடுத்துக் கொண்டு படிப்பதற்கு வரக்கூடாது அப்பனே! அரிவாளை எடுத்துக்கொண்டு கசாப்புக் கடைக்கு ஆடு வெட்டப் போயிருக்க வேண்டும் இதோ கீழே விழுந்து கிடக்கிறதே. இந்தக் கத்தியைக் கையில் மறுபடியும் எடுத்துக்கொள். உன் போன்றவர்கள் படிப்பதற்குப் பணம் செலவழித்துக் காலேஜ் கட்டி வைத்திருக்கிற என்னைக் குத்து. அப்புறம் உன் போன்றவர்கள் படிப்பதற்குப் புத்தகமெழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே, அந்த மேதைகளை எல்லாம் அவர்கள் உயிரோடு இருந்தால் கொலை செய்துவிட்டு வா... கடைசியாக உன்னை நீயே குத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/119&oldid=1356373" இலிருந்து மீள்விக்கப்பட்டது