பக்கம்:பொன் விலங்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பொன் விலங்கு

கொள்ளலாம்..." என்று கூறிக்கொண்டே இரண்டாம் முறையாக அவனை அறைவதற்காக உணர்ச்சி வெறியோடு கையை ஓங்கினவர், அவன் தன் கண்களில் நீர் நெகிழ்ந்து அழத் தொடங்கியிருப்பதைப் பார்த்துக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பேச்சை நிறுத்தினார். அவன் முகத்தையே பார்த்தார். கோவென்று பெரிதாகக் கதறி அழத் தொடங்கிய அந்தப் பையன் நெடுஞ்சாண்கிடையாக அவர் கால்களில் விழுந்துவிட்டான். எப்படி வெறிகொண்டு நின்றவனை அப்பா எப்படி அழச் செய்துவிட்டார் என்பதை கண்ணெதிரே பார்த்த பாரதிக்கு வியப்புத் தாங்கவில்லை. கம்பெனிகளையும் தொழில் நிறுவனங்களையும் நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியத்தைவிட மனித உணர்ச்சிகளை ஏற்ற இடத்தில் ஏற்ற விதமாக நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியம் அப்பாவிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு பெருமையாக இருந்தது அவளுக்கு. 'கேம்பிரிட்ஜ் மாணவராயிருந்து வெளிநாட்டுப் பல்கலைக் கழகமொன்றில் டாக்டர் ஆப் லிட்ரேச்சர் பட்டமும் பெற்று ஒரு டஜன் ஆண்டுகளுக்குமேல் கல்லூரி முதல்வராயிருக்கிற ஒருவரால் சமாளிக்க முடியாத முரடனை அப்பா நான்கே நான்கு நிமிடப் பேச்சில் அழச் செய்து காலில் விழ வைத்த சாமர்த்தியத்தைக் கண்டு அவள் பிரமித்தாள். கல்லூரி முதல்வர் இந்த முரடனிடம் கத்திக் குத்துப்பட்டு ஆஸ்பத்திரியில் விழுந்து கிடக்கிறார். அப்பாவோ உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலேயே இந்த முரடனின் இதயத்தை மிக ஆழமான பகுதியில் குத்தி வீழ்த்திவிட்டார். பிரின்ஸிபலாயிருந்து தலைகனத்துத் திரிந்து அசட்டுக் கெளரவமும், பதவித் திமிரும் கொண்டாடிப் பயனில்லை. மனித உணர்ச்சிகளை எதிர்கொண்டு நிர்வாகம் செய்து ஆளவும் அடக்கவும் தெரிய வேண்டும். அது தெரிந்தவன்தான் தலை சிறந்த பேராசிரியன். அப்பாவுக்கு அது தெரிந்திருந்ததற்காக அவள் அவருடைய மகளென்ற முறையில் பெருமைப்பட்டாள்.

"போலீசில் கம்ப்ளெயின்ட் செய்ய வேண்டாமா?" என்று ஏதோ ஆரம்பித்தார் ஹெட்கிளார்க்.

"வேண்டியதில்லை! நல்ல பெயர் பெற்றிருக்கும் என் கல்லூரியைப் பற்றிப் பத்திரிகைகளில் தாறுமாறாக செய்தி வரக்கூடாது. நான் பிரின்ஸிபலை உடனே பார்க்கப் போக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/120&oldid=1356411" இலிருந்து மீள்விக்கப்பட்டது