பக்கம்:பொன் விலங்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121

பிரித்துக்கொண்டு திருப்தியடைந்து விட்டால் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடாதா?" என்று யாராவது விவரம் தெரிந்தவர்களோ, விவகாரம் தெரிந்தவர்களோ எதிர்த்துக் கேட்டுவிட்டால் கண்ணாயிரத்துக்குக் கோபம் வந்துவிடும். வாணக் குழாய் போன்ற பெரிய மூக்குக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வண்டுகள் ஒட்டிக்கொண்டிருப்பது போல் ஒட்டிக்கொண்டு தெரியும் இட்லர் மீசையும் அந்த மீசையோடு சேர்ந்து கோபமுமாகத் தெரியும்போது கண்ணாயிரம் கண்ணாயிரம் தான். தான் எதையும் எதற்காகவும் கண்டிக்கலாம், கோபிக்கலாம்; ஆனால் தன்னை எதற்காகவும், யாரும் கண்டிக்கக் கூடாது, கோபிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறவர் கண்ணாயிரம். ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியோடு சொக்கநாதப் பெருமான் எதிரே வந்து நின்றால்கூட, 'உம்முடைய திருவிளையாடல் பிரதாபங்களைப் பற்றி ஆறுக்கு நாலு இரண்டு பத்தி மூன்று கலர் விளம்பரம் ஒன்று கொடுக்கிறீரா?" என்று கேட்பதற்குக் கண்ணாயிரம் தயார். ஒவ்வொரு விநாடியையும் பணமாக்கி விடவேண்டும் என்று தவித்துக்கொண்டு துறுதுறுவெனத்திரிபவர் கண்ணாயிரம். மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸி காரியாலயத்தின் நிலைப்படிக்கு மேலே, “உங்கள் வரவு நல்வரவாகுக ” என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தில் வரவு என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் அதற்கு 'வருமானம்' என்றுதான் பொருள்படும். 'மூன்லைட் அட்வர்டைலிங் ஏஜன்ஸி' காரியாலயத்தில் நல்வரவு அதிகமாயிருக்கலாம். ஆனால், செலவு என்னவோ வெறும் வார்த்தைகள்தான். கண்ணாயிரம் அங்குவரும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கிற அதிகபட்ச மரியாதை ஒரு கப் காபி அல்லது வெற்றிலை + சீவல் + சுண்ணாம்பு (தேவையானால்) + பன்னீர்ப் புகையிலை. மிகவும் அதிகபட்சமாகச் செய்கிற மரியாதை போர்ன்விடா அல்லது ஒவல் என்று இப்படி ஏதாவது இருக்கும். வருகிறவர்களுக்குச் செய்கிற அதிகபட்ச அவமரியாதை, என்னவென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மரியாதை, அவமரியாதைகளுக்கு அங்கே தனித் தனி இலட்சணங்கள் கிடையாது. அங்கே செய்யப்படுகிற மரியாதைகளிலும் அவமரியாதை இருக்கலாம். அதேபோல் அவமரியாதைகளிலும் மரியாதை இருக்கலாம். வருகிறவன் புத்திசாலியாயிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/123&oldid=1356486" இலிருந்து மீள்விக்கப்பட்டது