பக்கம்:பொன் விலங்கு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பொன் விலங்கு

அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். புத்திசாலிகள் பெரும்பாலும் கண்ணாயிரத்தைத் தேடிவந்து மாட்டிக் கொள்ள மாட்டார்கள். தப்பித் தவறி யாராவது புத்திசாலிகள் வகையாக வந்து சிக்கிக் கொண்டாலோ கண்ணாயிரம் அவர்களைச் சீக்கிரமே முட்டாள்களாக மாற்றி விடுவதில் சமர்த்தர். கண்ணாயிரத்தினிடம் முட்டாள்களைப் புத்திசாலிகளாக மாற்றும் உலகத்துக்குத் தேவையான திறமை இல்லாவிட்டாலும் புத்திசாலிகளை முட்டாள்களாக மாற்றும் உலகத்துக்கு தேவையில்லாத திறமை ஏராளமாக இருந்து தொலைத்தது. கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் வேகம் அதிகம். அவரிடம் அநியாயமான சுறுசுறுப்பு இருந்தது. மதுரைச் சீமையில் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளைச் சேர்ந்த ஜமீன்தாரோ, மிட்டாதாரோ, மிராசுதாரோ, சமஸ்தானாதிபதியோ மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் தங்குவதற்கு இடம் முதல், அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் வரை எல்லாம் கண்ணாயிரத்தின் கையில், கண்ணாயிரத்தின் பொறுப்பில் தயாராயிருக்கும். இப்படிப் பல பிரமுகர்களைக் கட்டிக் காக்கிற ஒரு பெரும் பிரமுகராயிருந்தார் கண்ணாயிரம். பிரமுகர்களை வரவேற்பதற்கும், வழியனுப்பு வதற்குமாக முக்கால்வாசி நேரம் ரயில்வே பிளாட்பாரத்திலேயே நாட்களைக் கழிக்கிறவர் அவர். ஒரு காரியம் முடிகிற இடத்தில் இன்னொரு காரியம் ஆரம்பமாகிறாற்போல அவ்வளவு விரைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையை உடையவர்.அவர். முடிந்தகாரியத்துக்குப் பக்கத்தில், முடிய வேண்டிய காரியம் வந்து காத்துக் கொண்டிருப்பது அவருடைய வழக்கம். அன்று அதிகாலையில் யாரையோ இரயிலேற்றிவிட வந்தவர் அதே இரயிலில் மோகினியும் அவள் தாயும் அவர்களோடு அவர் முற்றிலும் எதிர்பாராத ஆளாகச் சத்தியமூர்த்தியும் வந்து இறங்கக் கண்டார். கூந்தல் தைல விளம்பரப் படத்துக்காக மோகினியின் தாயிடம் முன்பணம் கொடுத்துத் தேதி குறித்திருப்பது ஞாபகம் வந்தது அவருக்கு. உடனே ‘இன்று காலையிலேயே அந்தப் புகைப்படத்தை எடுத்து முடித்துவிட்டால் என்ன?’ என்று கண்ணாயிரத்தின் வியாபார மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. ‘இந்தப் பையன் சத்தியமூர்த்தி எப்படி மோகினியோடும் அவள் தாயோடும் இரயிலில் சேர்ந்து வர நேரிட்டது?’-என்ற சந்தேகம் அவருடைய மனத்தில் வந்து அலைமோதவே சத்தியமூர்த்தியிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/124&oldid=1356513" இலிருந்து மீள்விக்கப்பட்டது