பக்கம்:பொன் விலங்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பொன் விலங்கு

பயத்தில் சாமர்த்தியமாக நடந்துகொண்டு சமாளித்தார் அவர். கெளரவத்தை விடக் காரியம் முக்கியமாயிற்றே அவருக்கு.

“புகைப்படம் எடுக்கிற இடத்துக்குப் போவதற்குமுன் அந்தப் பையனுடைய வீட்டுவாயிலில் காரை நிறுத்தி அவனை வெளியே கூப்பிடுகிறேன். நீயே பேனாவை அவனிடம் கொடுத்துவிடலாம். பாவம் உன் ஆசையைத் தான் நாங்கள் கெடுப்பானேன்?” என்று மோகினியைப் பார்த்து அசட்டுச்சிரிப்பை சிரித்தார் கண்ணாயிரம். நாகரிகமில்லாத அந்தச் சிரிப்பை எரித்துவிடுவது போன்ற பார்வையால் எதிர்கொண்டாள் மோகினி. கண்ணாயிரத்தின் காரில் அவர் உடன் இருந்து ஒட்டிக்கொண்டு வர அமர்ந்து செல்வதை நினைத்தபோது ஏதோ நரகத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல் அருவருப்பாகவும் வேதனையாகவும் உணர்ந்தாள் மோகினி. ‘அம்மாவுக்கு இப்படியெல்லாம் இது நரகமாகத் தோன்றாது’. ஏனென்றால் இந்த விதமான நரகங்களில் உழன்று உழன்று பணம் சேர்த்துக்கொண்டு வாழ ஆசைப்படுவதுதான் அம்மாவின் வாழ்க்கை இலட்சியம். எனக்காகவே இந்த மாதிரி நரகங்களைப் படைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறாளே அம்மா? நான் கண்ணாயிரத்திடம் சிரிக்கச் சிரிக்கப் பேசினால் அம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும். கண்ணாயிரம் அறிமுகப்படுத்துகிற மஞ்சள் பட்டி ஜமீன்தாருக்கு என் கைகளால் சிற்றுண்டி கொடுத்தால் ‘பெண் பிழைக்கத் தெரிந்தவளாக இருக்கிறாளே’ என்று அம்மா மகிழ்ச்சி அடைவாள்.

‘பணமும் பகட்டும் உள்ளவர்களுக்குமுன் எல்லாம் நீ தாராளமாகச் சிரித்து முகம் மலரப் பேச வேண்டும்டி பெண்ணே! உன்னுடைய சிரிப்புக்கு முன்னால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் மயங்கியே ஆகவேண்டும்’ என்று பச்சையாகவே வாய் கூசாமல் என்னிடம் சொல்கிற அம்மா முன்நான் நியாயம் பேசி என்ன பயன்? நானாக ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று எந்தவிதமாகவும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கக் கூடாதாம். நான் எப்படி வாழ வேண்டும் என்று அம்மாநினைக்கிறாளோ அப்படித்தான் நான் வாழ வேண்டுமாம். இன்னொருவர் நினைக்கிறபடி - சொல்கிறபடி - கட்டளையிடுகிறபடி அடிமைகள்தான் வாழ்வதாகச் சொல்வார்கள். அம்மா என்னைப் பெண்ணாகப் பெறவில்லை. பெண்ணாக வளர்க்கவும் இல்லை. அடிமையாகப் பெற்றாள். அடிமையாகத்தான் வளர்க்கவும் ஆசைப்படுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/126&oldid=1356568" இலிருந்து மீள்விக்கப்பட்டது