பக்கம்:பொன் விலங்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

11

"இது இப்படித்தான் நடக்கும் - இப்படித்தான் நடக்க முடியும் - என்று எந்த முயற்சியும் நீ ஆசைப்படுகிறபடியே முடிய வேண்டும் என்பதாகச் செயலை மறந்து விளைவை மட்டும் எண்ணிக் கற்பனைகளை வளர்க்காதே. அது வேறுவிதமாக நடந்தாலும் தாங்கிக் கொள்ளத் தயாராக இரு. கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே" - என்று பலரிடம் பேசியும் பலமுறை பேசியும் திரும்பத் திரும்ப எழுதியும் இந்த வாக்கியங்களின் பொருள் அவன் மனத்தில் பதிந்து ஊறிப் போயிருந்தது. கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே என்ற வாக்கியத்தை விவேகானந்தர் தம்முடைய தலைமுறையில் அடிமைத் தளையில் சிக்கிக் கீழே விழுந்து கிடந்த பாரத நாட்டை நினைத்துக் கூறினாரா, தனி மனிதனை நினைத்துக் கூறினாரா என்று சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான்.

பஸ்ஸைத் தவற விட்டுவிட்டு, மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தின் பிரயாணிகள் தங்கும் அறையில் உட்கார்ந்து நிதானமாக அந்த ஊரின் பெயரழகை இரசித்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வாக்கியத்தைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடைய வறுமை மயமான இளமைப் பருவத்தில் இந்த வாக்கியத்தை அடிக்கடி நினைத்தாக வேண்டிய பல சந்தர்ப்பங்கள் அடுக்கடுக்காக அவனுக்கு ஏற்பட்டிருக்கின்றன. கீழே விழுகிற போதெல்லாம் வேகமாக எழவேண்டும் என்ற முனைப்பையும் தன்னம்பிக்கையையும் அவன் அடைந்திருக்கிறான். ஒவ்வொரு முறை கீழே விழ நேரிடும் போதும் முன்னால் விழுந்தபோது எழுந்ததைவிட இப்போது இன்னும் வேகமாக எழவேண்டும் என்ற துடிப்பை அவன் உணர்ந்திருக்கிறான். தன்னுடைய பலம், தான் அடைகிற வெற்றிகளால் ஞாபகப்படுத்தப் பெறுவதாக அவன் ஒருபோதும் நினைத்ததுமில்லை; நம்பியதுமில்லை; தன்னுடைய பலமும் வலிமைகளும் தான் அடைகிற ஒவ்வொரு தோல்வியின்போதும் தனக்கு ஞாபகப்படுத்தப் பெறுவதாகத்தான் அவன் உணர்ந்திருக்கிறான் - நம்பியிருக்கிறான் - வாழ்ந்திருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/13&oldid=1405622" இலிருந்து மீள்விக்கப்பட்டது