பக்கம்:பொன் விலங்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129

'காரியத்தைக் கெடுத்துடுவீங்கபோல் இருக்கே, அதும் போக்குப்படியே விட்டுப் பிடியுங்க முத்தழகம்மா! முதலில் போட்டோவுக்கு உட்கார்ந்து காரியம் முடியட்டும். அது முக்கியம். அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்" என்று அம்மாவை உள்ளே அழைத்துப்போகும்போது கண்ணாயிரம் சொல்லிக் கொண்டு சென்றதைக் காரில் உட்கார்ந்தபடியே மோகினியும் கேட்க முடிந்தது. 'என்ன நரகவாழ்க்கை இது? போட்டோ முடிந்து வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் கண்டித்துச் சொல்லிவிட வேண்டும். எண்ணெய் விளம்பரம், சீயக்காய்ப் பொடி விளம்பரமென்று இனிமேல் என் உயிரை வாங்கப்படாது அம்மா! மானமாக ஏதாவது செய்து சம்பாதித்துப் போடுகிறேன். கோவில் திருவிழா, நல்லவர்கள் நடத்துகிற சபை ஆண்டுவிழா என்று கெளரவமாக நாலு இடங்களில் நான் படித்திருக்கிற நடனத்தைக் கலையாக ஆடுகிறேன். அதில் கிடைக்கிற சம்பாத்தியம் நமக்குப் போதும். இந்த அல்ப ஆசைகளையெல்லாம் விட்டுவிடு. இனிமேலாவது என்னைப் புரிந்துகொள். மஞ்சள்பட்டிஜமீன்தாரும், மயில் தோகை மார்க் கூந்தல் தைலக்காரனும் அவர்களைக் கட்டிக்கொண்டு அழுகிற கண்ணாயிரமும் எக்கேடுகெட்டு வேண்டுமானால் போகட்டும், நீ என்னை அநியாயமாகக் கொல்லாதே. நான் இதெற்கெல்லாம் ஆளில்லை...' என்று அம்மாவிடம் எப்படி எப்படிச் சீற்றத்தோடு பேசவேண்டும் என்பதை நினைத்தபோது அந்த நினைப்பே துணிவாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடியது அவள் மனத்தில். இரண்டு மாதங்களுக்கு முன் முதன்முதலாக இந்த மஞ்சள்பட்டி ஜமீன்தார் என்ற பெருங்குடி மகனைக் (நிறையக் குடிப்பவரை) கண்ணாயிரம் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியதையும் அம்மா தனக்கு அவரை அறிமுகப்படுத்திய போது தான் கனன்று சீறிவிழுந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள்மோகினி. 'அன்றைக்கு எங்கிருந்துதான் தனக்கு அவ்வளவு கோபம் வந்ததோ?’ என்பதை இப்போது எண்ணுகிற வேளையில் அவளுக்கே வியப்பாயிருந்தது. அம்மாவும் சுற்றியிருந்தவர்களும் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முயன்ற பல வேளைகளில் தான் முரண்டு பிடித்து நெருப்பாக இருந்து அவர்களைச் சுட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன அவளுக்கு. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் மிகச்

பொ. வி - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/131&oldid=595061" இலிருந்து மீள்விக்கப்பட்டது