பக்கம்:பொன் விலங்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பொன் விலங்கு

வந்தான் அவன். 'அன்பின் பரிபூரணமான தன்மையை கனிந்து நிற்கிறாற்போல ஒர் அழகிய சொல்லால் உங்களை அழைக்க விரும்பினேன் -என்று பூபதியின் மகள் தனக்கு எழுதியிருந்ததை அப்போது நினைத்துக்கொண்டான் சத்தியமூர்த்தி. இன்னொருவரால் விரும்பப்படுகிறோம் என்றோ தெரியவரும்போது அன்பு செய்யப்படுகிறோம் என்றோ தெரியவரும்போது இயல்பாக உண்டாகிற உற்சாகம் அப்போது அவன் மனத்திலும் ஓரளவு ஏற்பட்டிருந்தது. சர்க்கஸில் ஒர் ஆளை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு முகத்தையும் உடலையும் தவிரச் சுற்றிலும் போய்ப் பதிந்து கொள்கிறாற்போல நெருப்புடன் கூடிய கத்திகளை வீசி. எறிவார்களே, அப்படிச் சிந்தனைகளாலும் சூழ்நிலைகளாலும், துன்பங்களே தன்னைக் குறி வைத்து வீசப் பெறுவதாக உணர்ந்து தவிக்கும் வேளையில் நடுவே ஒரு பூச்செண்டும் வந்து விழுந்ததென இந்தக் கடிதம் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருப்பதாக அவன் எண்ணினான். நண்பகல் நேரத்தின் ஒடுங்கி ஓய்ந்த அமைதி வீட்டில் சூழ்ந்திருந்தது. அப்பா ஊஞ்சல் பலகையில் படுத்துத் துங்கத் தொடங்கியிருந்தார். 'கல்யாணி கல்யாணி என்று கிணற்றடி யிலிருந்து ஏழெட்டு முறை இளைய பெண்ணைப் பெயர்சொல்லி அழைத்து அலுத்துப்போன அம்மா மூத்த பெண் ஆண்டாளைக் கூப்பிட்டு, 'இந்தக் கல்யாணி எங்கேதான் இருக்கிறாள் என்று பார்த்துத் தொலையேன்” என்று கேட்டதையும் அதற்கு மறுமொழியாக அம்மாவிடம் ஆண்டாள். 'கல்யாணியைக் கேட்கிறாயா அம்மா! அவள் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். வடுவூர் பரமசாமி எழுதிய 'பரிமள விலாஸ் படுகொலை'யில் ஏழாவது அத்தியாயத்தில் இருக்கிறாளம்மா அவள். இருபது தடவை என்ன? எழுநூறு தடவை நீ தொண்டை கிழியக் கத்தினாலும் இப்போது அவள் காதில் விழாது..." என்று பதில் சொல்லியதையும் அத்தனை துயரமான மனநிலையிலும் இரசித்தான் சத்தியமூர்த்தி. 'இவ்வளவு வறுமையினிடையிலும் இந்த வீட்டில் சிரிப்பும் நகைச்சுவையும்கூட மீதம் இருக்கின்றனவே என்று எண்ணி வியந்து கொண்டான் அவன். குடும்பத்தை எதிர்நோக்கியிருக்கிற துன்பங்களும் பொருளாதாரத் தொல்லைகளும் தெரிந்தால் கல்யாணியால் நிம்மதியாகத் துப்பறியும் நாவல் படிக்க முடியாது. ஆண்டாளால் சிறிது வேடிக்கையாகப் பேசமுடியாது. பிள்ளையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/136&oldid=595071" இலிருந்து மீள்விக்கப்பட்டது