பக்கம்:பொன் விலங்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பொன் விலங்கு

கல்லூரிப் புத்தகங்களும் பல்கலைக் கழகத்தார் கொடுத்திருந்த எம்.ஏ. டிகிரியும் செய்ததைவிட அதிகமாகக் கவலைகளும், வறுமைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளுமே அவனைப் பெரிய சிந்தனையாளனாகச் செய்திருந்தன. நியாயமான கவலைகளில் பிறக்கிற சிந்தனையே தத்துவமாக மாறுகின்றதென்று கல்லூரி விவாத மேடையில் பலமுறை பேசியிருக்கிறான் சத்தியமூர்த்தி. ஒரு மனிதனின் நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட வாழ்க்கையில் அவன் நினைத்தவுடனேயோ, ஆசைப்பட்ட உடனேயோ கிடைத்து விடாதென்று சத்தியமூர்த்தி மிக இளமையிலிருந்தே உணர்ந்திருந்தான். அவனுடைய ஒரே வலிமை இந்த உணர்ச்சிதான். நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது; தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும், சேர்த்துப் போராட வேண்டியிருக்கும். சிந்தனையினாலோ, செயலினாலோ போராடித்தான் எதையும் அடையமுடியும். மனத்தினால் போராடப் பொறுமையும் பக்குவமும் இல்லாதவர்கள்தான் அவசரப்பட்டுக் கைகளால் போராடிவிடுகிறார்கள்.

வாதாம் பழத்தில் பருப்பு மாதிரி உரித்துத் தட்டித் தேடிச் சுவையைக் கண்டுபிடித்து எடுக்க வேண்டியிருக்கிறது - வாழ்க்கையில். வாழ்க்கையின் மிகப் பெரிய தேவை செல்வமும் செழிப்பும் அல்ல; இன்றுள்ள சூழ்நிலையில் நல்ல மனிதர்களும் நல்ல எண்ணங்களும் தான் சமுதாயத்தின் மிகப்பெரிய பற்றாக்குறையாய், மிகப் பெரிய தேவையாய் எதிர்பார்க்கப்பட்டு நிற்கிறது.

மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்து 'வெயிட்டிங் ரூமி'ல் அமர்ந்து இரவுச் சாப்பாட்டையும் பசியையும் மறந்து இப்படி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. குளிர் அதிகமாகவே பெட்டியைத் திறந்து சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். சாயங்காலம் கிடைக்காமல் தவறிப்போன கடைசி பஸ்ஸையும், நாளைக்குப் பொழுது விடிந்தால் அறுபது மைலுக்கு அப்பால் சரியாகப் பத்து மணிக்குக் காத்திருக்கும் 'இண்டர்வ்யூ'வையும் நினைத்தபோது மட்டும் சம்பந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/14&oldid=1405630" இலிருந்து மீள்விக்கப்பட்டது