பக்கம்:பொன் விலங்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 141

வீசிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் வழக்கமாகத் தெரிகிற நகரின் பெரிய கட்டிடங்களும் கோபுரங்களும் இன்று ஏதோ ஒருவிதமான புதுமாறுதலோடு அழகாகத் தெரிவன போலிருந்தன. சென்னைக்குச் செல்வதற்காக ஒவ்வொன்றாகத் தெற்கேயிருந்து வரப்போகும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கூட்டமும், கலகலப்பும் அப்போதே மதுரை நிலையத்தைத் திருவிழாக் கோலம் கொள்ளச் செய்திருந்தன. இரயில் நிலையத்தின் பல நிற விளக்கு ஒளிகளும் என்ஜின்கள் அங்குமிங்குமாகப் போய் வரும் ஒசைகளும் மற்றொரு பக்கம் தெற்கே தென்னை மரங்களும் வயல்களும், குடிசைகளும் அவற்றினூடே யாரோ வகுத்த கடினமான நியதிகளைப் போல ஆரம்பமாகித் தெற்கே போகப் போக வேறு வேறு திசைகளில் விலகும் இரயில் தண்டவாளங்களுமாக அந்த இடம் அந்த வேளையில் தனிப்பட்டதோர் அழகுடனே காட்சியளித்துக் கொண்டிருந்தது.

பாலத்தின் மேற்குப் புறத்து இறக்கத்தின் கனமான இரும்பு வேலியில் சாய்ந்தபடி இரயில் நிலையத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்தவாறே சத்தியமூர்த்தியும் குமரப்பனும் பேசிக் கொண்டிருந் தார்கள். விரிவுரையாளர் பதவிக்காக மல்லிகைப் பந்தலுக்குத் தான் போய்விட்டு வந்ததையும், மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததையும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. மல்லிகைப் பந்தல் ஊரையும், கல்லூரியையும் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதையும் சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் கூறினான். &

"கல்லூரி விரிவுரையாளராகத்தான் வேலை பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிற பட்சத்தில் அதை உள்ளுரிலுள்ள கல்லூரிகளில் ஏதாவதொன்றில் தேடிக் கொள்ளேன். செலவு சிக்கனமாக இருக்க முடியும் என்பதற்காகவே இந்த யோசனையை உனக்கு நான் சொல்கிறேன். மல்லிகைப் பந்தலைப் போல் வாழ்க்கைச் செலவுகளும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்த மலைநாட்டு நகரமொன்றில் வேலை பார்க்கச் சென்றால் அங்கே நீ தங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/143&oldid=595087" இலிருந்து மீள்விக்கப்பட்டது