பக்கம்:பொன் விலங்கு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 149

அங்கிருந்து தப்பிச் செல்ல வைப்பதற்குச் சத்தியமூர்த்தி மிகவும் பாடுபட்டான். 'நமக்கு ஏன் வம்பு? இப்படித் தெருவில் ஆயிரம் நடக்கும். ஒன்றையும் கண்டு கொள்ளாதது போல் போவதுதான் நாகரிகம்' என்று எல்லாரும் சாதாரணமாக நினைப்பதுபோல் நினைத்துக் கொண்டு அவனும் வீட்டுக்குப் போயிருந்தானானால் அந்தப் பிச்சைக்காரி குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே அடிபட்டு விழுந்து கிடக்கும்படி நேரிட்டிருக்கும். அப்படி நேரிடும்படி விடுவதற்கு நிச்சயமாக அவன் தயாராக இல்லை. அந்த ஊர் வம்பைத் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்துவிட்டு அவன் வீட்டுக்குத் திரும்பியபோது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்க் கைகால் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு திரும்பியபோது வாயிலில் கார் வந்து நிற்கிற ஓசையும் அதையடுத்து மிதியடி ஒசைசரசரக்க அப்பா நடையேறி வருகிற ஓசையும் கேட்டது.

'பையனை நாளைக்கு என்னை அவசியம் வந்து பார்க்கச் சொல்லுங்கள்...' என்று கார் வாசலிலிருந்து கிளம்புவதற்கு முன் காருக்குள் இருந்தபடியே கண்ணாயிரம் தன் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்ற சொற்களும் வீட்டுக்குள்ளேயிருந்து வந்த கொண்டிருந்த சத்தியமூர்த்திக்குக் கேட்டன.

“ஏண்டா! நீ சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய் பார்க்க வில்லையா?" என்ற கேள்வியோடும் கோபத்தோடும் அவனை எதிர்கொண்டார் தந்தை, சிறிது நேரம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. மிகவும் நிதானமாகவும் பொறுமையிழந்து விடாமலும் அவருக்குப் பதில் சொல்ல விரும்பினான் அவன். அந்தக் கேள்விக்கு மறுமொழிசொல்ல அவன் அவ்வளவு நேரம் தயங்குவதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத தந்தை இரண்டாவது தடவையாகவும் கடுமையான குரலில் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.

'இன்றைக்குப் பார்க்க முடியவில்லை அப்பா முடிந்தால் நாளைக்குப் பார்க்கிறேன்!"

'அந்த வெட்டிப்பயல் வாயரட்டைக் குமரப்பனோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கு நீ கண்ணாயிரத்தைப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/151&oldid=595105" இலிருந்து மீள்விக்கப்பட்டது