பக்கம்:பொன் விலங்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பொன் விலங்கு

முடியாமல் போகும். நான் உன்னை டவுன் ஹால் ரோடில் போகும்போது பார்த்தேன். நீ மட்டும் தனியாயிருந்தால் அங்கேயே காரை நிறுத்தச்சொல்லியாவது பார்த்திருக்கலாம். தவிரவும் நமக்குக் காரியம் ஆகவேண்டுமானால் நாம்தான் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கணும். இப்படி மனிதர்களை மதிக்காமல் விலகிப் போனால் ஒரு காரியமும் ஆகாது."

சத்தியமூர்த்தி மெளனமாக நின்று கொண்டிருந்தான். தயவு செய்து கண்ணாயிரத்தை மதிக்கச் சொல்லி என்னை வற்புறுத் தாதீர்கள், அப்பா என்று தந்தைக்குப் பதில் சொல்லிவிட அவன் நாக்குத் துடித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன். தந்தை அவன் மேல் கோபத்தோடு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். உள்ளே அம்மா சாப்பிடுவதற்கு இலை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ சொல்லித் தீர்க்க முடியாத ஊமை வேதனை மனத்தை அரிப்பது போலிருந்தது. அப்படியே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு மறுபடியும் தெருவில் இறங்கி நடந்து விட்டான் அவன். யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அம்மாசாப்பிடு வதற்குத் தேடுவாளே என்றும் கவலைப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குள் தங்கினால் தந்தையோடு பேச்சு வளரும் என்று நினைத்தே அவன் புறப்பட்டிருந்தான். வடக்கு மாசிவீதியில் கிருஷ்ணன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து பேச்சியம்மன் படித்துறைக்குப் போகிற சாலையில் அவனுடைய வீடு அமைந் திருந்தது. அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயில் சந்து வழியாக நடந்தான் அவன். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்புவதே அப்போது அவன் நோக்கமாக இருந்தது. கோயில் அந்த நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்கும். அத்தகைய அமைதி நிறைந்த சூழ்நிலையில் நான்கு ஆடி வீதிகளையும் ஒருமுறை சுற்றிவிட்டு வந்தாலே மனம் நிம்மதி யடைந்துவிடும். சத்தியமூர்த்தி இந்த அநுபவத்தைப் பலமுறை உணர்ந்திருக்கிறான். கம்பீரமான அந்த கோபுரங்களைக் கால் நாழிகைப் போது இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். மதுரையின் அந்தக் கோபுரங்களுக்கும் அவற்றையுடைய ஆலயத்துக்கும் அப்படி ஒரு சக்தி உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/152&oldid=595107" இலிருந்து மீள்விக்கப்பட்டது