பக்கம்:பொன் விலங்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 151

கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை தெருத் திருப்பத்தில் அவனுக்கு எப்போதோ அறிமுகமாகியிருந்த பாட்டு வாத்தியார் ஒருவர் சந்தித்துப் பேசப் பிடித்துக் கொண்டு விட்டார். தெரு முனையில் வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்று கொண்டிருந்தவர் சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் கூடவே நடந்து பேசிக் கொண்டு புறப்பட்டு விட்டார். ஒருவிதமான குறைவுமில்லாமல் பெயரில் மட்டும் குறைவு பட்டு மொட்டைக் கோபுரம் என்ற பெயரோடு மொட்டையில்லாமல் பூரணமாய் நிமிர்ந்து நிற்கும் வடக்குக் கோபுரம் எதிரே தெரிந்தது. கோபுர வாசல்வரை பேசிக் கொண்டே வந்த பாட்டுவாத்தியார் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். மொட்டைக் கோபுரத்து முனியாண்டிக்குச் சிதறு தேங்காய்ப் போடுவதைப் பொறுக்குவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டிருக்கும் விடலைக் கும்பலின் கூப்பாடு கூட அப்போது அங்கே அடங்கிப் போயிருந்தது. கோவிலுக் குள்ளேயும் கூட்டம் இல்லை. அவ்வளவு அமைதியை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று சொல்லும்படி கோவிலின் எல்லாப் பகுதிகளும் இயல்பை மீறின அமைதியோடு இலங்கின. அம்மன் சந்நிதிக்கு முன்புறம் கிளிக்கூட்டு மண்டபத்தினருகே எதிர்பாராத விதமாக மோகினியைச் சந்தித்தான் அவன். கையில் தேங்காய்ப் பழக்கூடையோடு சந்நிதிக்குள் போவதற்காக அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுக்காக அவளோடு வந்திருந்த சிறுபையன் அர்ச்சனைச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அப்போதிருந்த மன நிலையில் அந்த எதிர்பாராத சந்திப்புக்காக ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கவோ, அவளோடு நின்று பேசவோ தோன்றாமல் நேரே சந்நிதிக்குள் நடந்து போய் விட்டான் சத்தியமூர்த்தி. மோகினியும் அவனைப் பின் தொடர்ந்துதான் சந்நிதிக்குள்ளே சென்றாள். யாரையும் எதிரே சந்திக்கவோ, பேசவோ விருப்பமில்லாமல் நைந்து போயிருந்த அந்த மனநிலையிலும் கூடச் சத்தியமூர்த்தியின் கண்களில் அவள் அழகு தனித்தன்மையோடு தெரிந்து கவர்ந்தது. அம்மன் சந்நிதி முகப்பில் பாதரலம் உருகுவது போல் ஒளி ஒழுகிக்கொண்டிருந்த நீலக்குழல் விளக்குகளின் கீழே நிறங்களே தமக்குள் ஒன்றுபட்டு முயன்று படைத்த அபூர்வ ஒவியமாய்த் தோன்றினாள் மோகினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/153&oldid=595109" இலிருந்து மீள்விக்கப்பட்டது