பக்கம்:பொன் விலங்கு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 153

நேருக்கு நேர் பார்க்கக் கூசியபடி வேறு எங்கோ பார்த்துக்கொண்டே சொல்லிய மற்றொரு வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தைத் தொட்டு உணர்வு நெகிழும்படி செய்தது:

"உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனமும் கிடைத்திருக்கிறது...' என்று சொல்லிவிட்டு மேலே நடக்கத் தோன்றாமல் நின்றாள் அவள்.

சத்தியமூர்த்தி தன்னைத் தானே வெறுத்துக் கொள்கிற குரலில் அவளுக்கு மறுமொழி கூறினான்:

"என்னையாதெய்வமென்று சொல்கிறீர்கள்? நான்துயரங்களும் தேவைகளும் நிறைந்த வெறும் மனிதன். பலவீனங்களும் தோல்விகளும் நிறைந்த ஏழை. ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிற பாமரன். சாண் ஏறினால் முழம் சறுக்கித் தொல்லைப்படுகிறவன். கண்ணாயிரத்தைப்போல் எல்லாவிதமான வசதிகளும் உள்ளவர்கள்தாம் இன்றைய சமூகத்துக்குத் தெய்வமாகிற தகுதி உடையவர்கள். நானும் என்னைப் போன்றவர்களும்கூட அவர்களிடம் வேலைக்குச் சிபாரிசு தேடிக்கொண்டு போய் நிற்கவேண்டிய அளவு வசதியற்றவர்கள்.

"அந்தப் பாவியின் பெயரை இப்போது எதற்கு எடுக்கிறீர்கள்? காலையில் கூந்தல் தைல விளம்பரத்துக்காகப் புகைப்படம் எடுக்கிறபோதே அந்தப் பாவிக்கும் எனக்கும் தகராறு வந்தது. அவள் ஏதோ ஒரு சேலையைக் கொண்டு வந்து கொடுத்து, இதைக் கட்டிக் கொண்டால்தான் படம் எடுக்க நன்றாயிருக்கும் என்றான். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். கடைசியில் நான் சொல்லியபடிதான் அவன் படம் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் அம்மாவுக்கு என்மேல் ஒரே ஆத்திரம். நான் அந்தப் பாவி சொல்கிறபடிதான் கேட்க வேண்டுமென்கிறாள் அம்மா..."

'வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிறபடியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏற்றுக் கொள்வதற்குக் கடுமை யாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்தாலும் கூட இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/155&oldid=595113" இலிருந்து மீள்விக்கப்பட்டது