பக்கம்:பொன் விலங்கு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 155

பேசப்படுகிறவரை மயக்கிவிடுந் தன்மையும் வாய்ப்பதையும்கூட அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான்.

'என்ன மயக்கம் வேண்டிக் கிடக்கிறது? அழகில்லாமல் முகத்தில் அரிதாரமும் பூசிக் கொள்ளாமல் மாசிவீதி ஆலமரத்தில் சந்தித்த பிச்சைக்காரியைப்போல் பசிக் கொடுமைக்காக வயிற்றில் பானையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாகத் தோன்றிப் பிறரை மயக்க முயல்கிறவர்கள் அகப்பட்டுக் கொண்டால் கல்லெறிபடு கிறார்கள்.

இந்த உலகமும் வசதி உள்ளவர்கள் பொய்யாக மயக்குவதைத் தான் மன்னிக்கத் தயாராக இருக்கிறது. வசதி அற்றவர்கள் அதே காரியத்தைச் செய்யும்போது அகப்பட்டுக் கொள்கிறார்களே...' என்று வெறுப்பான வழியிலும் அவன் சிந்தனை சிதறி ஓடியது. ஒன்றும் பேசிக் கொள்ளாமல் பிராகாரத்தில் போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். மோகினியோடு சேர்ந்து இணையாக நடக்காமல் அவளுக்குப் பத்தடி முன்பாகவோ, பின்பாகவோ விலகி நடந்துபோக வேண்டுமென்று தன்னால் ஆனமட்டும் சத்தியமூர்த்தி முயன்று பார்த்தான். அவன் வேகமாக நடந்தால் அவள் நடையும் வேகமாகியது. அவன் மெதுவாக நடந்தால் அவள் நடையும் மெதுவாகியது. இலட்சணமான தேர் அலங்கரிக்கப்பட்டு வீதியில் வருவதுபோல் அவள் நடப்பது மிக நன்றாயிருந்தது.

அம்மன் சந்நிதியிலிருந்து சுவாமி சந்நிதிக்குள் போகிற வழியில் நகர முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட மான முக்குறுணியரிசிப் பிள்ளையாரைக் கடந்து வலதுபக்கத்தில் தொடங்கும் பெரிய பிராகாரத்தில் இப்போது போய்க் கொண்டி ருந்தார்கள் அவர்கள்.

"நீங்கள் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும், அப்போது உங்கள் முன்னிலையில் நீங்கள் மட்டுமே காணும்படி ஆண்டாள் பாசுரத்துக்கு அபிநயம் பிடித்து ஆடிக்காட்டுவேன் நான்."கெஞ்சுவது போன்ற குரலில் அவள் அவனிடம் இந்த வேண்டுகோளைச் சொல்லும்போது அவர்கள் சங்கத்தார் கோவிலைக் கடந்து வடக்குப் பிராகாரத்தில் புகுந்திருந்தார்கள். பிராகாரம் அதன் அடுத்த நுனி வரையில் வேறு மனித சஞ்சாரமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/157&oldid=595117" இலிருந்து மீள்விக்கப்பட்டது