பக்கம்:பொன் விலங்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பொன் விலங்கு

கழுத்தில் டையையும், முக்குக் கண்ணாடியையும் கூடக் கழற்றாமல் உட்கார்ந்தபடியே பாதித் தூக்கம் தூங்கும் இந்த மனிதர் ஏதோ ஒரு கம்பெனியின் ஊர் சுற்றும் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதோ இங்கே ரப்பர் தலையணையை ஊதி உப்ப வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும்.

'எல்லாரும் காத்திருக்கிறார்கள். எதற்காக? இரயிலுக்காக மட்டும் அல்ல; வேறு எதற்காகவுமோ சேர்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணியபோது வாழ்க்கையையே ஒரு பெரிய வெயிட்டிங் ரூம் ஆகக் கற்பனை செய்யலாம் போலத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அடுத்த கணமே அப்படிக் கற்பனை செய்வது தன் வயதுக்கு அதிகப் பிரசங்கித்தனமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது அவனுக்கு. புத்திக் கூர்மையாலும், துறுதுறுவென்று எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் சிந்தனை அநுபவத்தாலும் அவன் மனத்துக்கு வயது அதிகமாயிருந்தாலும் உலகம் அவனுடைய தோற்றத்தையும், உடலையும், இளமை மலர்ந்த வசீகரமான முகத்தையும் கொண்டு அவனை இளைஞனாகத்தானே சொல்லும். மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்பே சில உண்மைகளைச் சொல்லும் உரிமையை மனிதன் அடைய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்போ உண்மைகளைப் பேசும் சுபாவமே சிலரிடமிருந்து போய்விடுகிறது. சிந்தனைச் சுதந்திரம் உள்ள நாடுகளில் உண்மையைப் பேச வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது சத்தியமூர்த்தியின் கருத்து.

வெடவெடக்கும் குளிரில் இன்று இரவு இந்த மலையடிவாரத்து இரயில் நிலைய வெயிட்டிங் ரூமில் விழித்துக் கொண்டிருப்பது போலவே வாழ்க்கை முழுவதும் மற்றவர்கள் சோர்ந்து தளர்ந்தாலும் தான் ஒரு சீராக விழித்திருக்க வேண்டுமென்று விநோதமானதொரு விருப்பம் உண்டாயிற்று அவனுக்கு. அந்த நல்ல விருப்பத்தை உடனே வைராக்கியமாக மாற்றிக் கொண்டது அவன் மனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/16&oldid=1405631" இலிருந்து மீள்விக்கப்பட்டது