பக்கம்:பொன் விலங்கு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 169

நாச்சியார் திருமொழிப் பாசுரங்களோடு மோகினியின் நாட்டியம் தொடங்கியது. மோகினி ஆண்டாளாக நிற்க அவள் எதிரே கரும்பு வில்லில் மலர்க் கணை தொடுக்கும் கோலத்தில் இன்னொரு பெண் மன்மதனாகப் புனைந்து அலங்கரித்துக்கொண்டு ஆண் வேடத்தில் நின்றாள்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்தஅவி கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்குஎன்று உன்னித்து எழுந்த என் தடநகில்கள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படின்

. வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்ற விருத்தத்தை ஸாவேரி ராகத்தில் கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு பாடியவாறே மன்மதனை நோக்கிக் கைகூப்பினாள் மோகினி. மன்மதனை வணங்கிக் கெஞ்சும் கண்களும் தாமரை மொட்டுப்போல் அழகாகக் கூப்பிய கையுமாக அவளுடைய அந்தத் தோற்றம் மிக வனப்பாயிருந்தது. ஆண்டாளையும் மன்மதனையுமே நேரில் கண்டு கட்டுண்டிருப்பதுபோல் கூட்டம் பேரமைதியில் ஒடுங்கிப் போயிருந்தது. “கமல வண்ணத் திருவுடை முகத்தில் திருக்கண்களால் திருந்த நோக்கு எனக்கு அருளு கண்டாய்” என்று அடுத்த பாசுரத்தின் கடைசி வரிக்கு அவள் அபிநயம் பிடித்தபோது தன் முகத்தையே உற்றுப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி கூச்சத்துடனே தரையைப் பார்த்தான். கேசவநம்பியைக் கால்பிடிப்பாளென்னுமிப் பேறு எனக்கு அருளுகண்டாய்' என்று மற்றொரு பாசுரத்தின் கடைசி வரிக்கு அபிநயம் பிடித்த போதும் அவள் சத்தியமூர்த்தியையே பார்த்தாள். மீனாட்சிகோவில் பிராகாரத்தில் அவள்தன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டதை இப்போது அவன் நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பால் அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கினான். அப்போது யாரோ பின்வரிசையிலிருந்து தோள் பட்டையைத் தட்டிக் கூப்பிடுவதாகத் தோன்றவே திகைப்போடு திரும்பிப் பார்த்தான் சத்தியமூர்த்தி, வந்து நின்றது அந்தச் சிறுவன்தான். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/171&oldid=595148" இலிருந்து மீள்விக்கப்பட்டது