பக்கம்:பொன் விலங்கு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 r பொன் விலங்கு

நாட்டியத்தைப் பற்றி நிறையத் தெரியும். வர்ணம், தில்லானா, ஜாவணி, ஜதிஸ்வரம், சப்தம், அலாரிப்பு என்று அவன் ஏதாவது நாட்டியம் பார்க்கப் போய்விட்டு வந்த மறுநாள் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருப்பான். அப்போதெல்லாம் அந்த அரற்றலைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர சத்தியமூர்த்தி அதற்கு தன் மனத்தில் எந்தவிதமான முக்கியத்துவத்தையும் அளித்ததில்லை. இன்றோ 'வார்த்தைகளால் இவ்வளவு நேரத்தில் இப்படிப் பேசி முடித்து விடலாம்' என்று பேசி முடிக்க இயலாத அத்தனை அழகுகளும் இரகசியங்களும், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அந்தக் கலையில் நிரம்பியிருப்பதை மோகினி அவனுக்குப் புரிய வைத்து விட்டாள். இரண்டு மணி நேரத்துக்குமேல் அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு எழுந்திருந்தபோது மோகினியின் மேல் இனம் புரியாததொரு மதிப்பு உருவாகிய மனத்துடன் எழுந்திருந்தான் சத்தியமூர்த்தி. இவ்வளவு அருமையான கலைத்திறனும், தொழில் நுணுக்கமும் தெரிந்த பெண்தான் அன்று இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள் என்பதையும், அப்படி முயன்றபோது என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகலிடம் என்று தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளும் விரக்தியோடு கூறினாள் என்பதையும் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. நாட்டியம் முடிந்து எழுந்தபோது குமரப்பன் ஏதோ சொல்லத் தொடங்கினான்.

'பரதசாஸ்திரத்தை எழுதிய பரத முனிவர் மேலும் அபிநய தர்ப்பணத்தை எழுதிய நந்திகேசுவரர் மேலும் எனக்கு இப்போது சொல்ல முடியாத கோபம் வருகிறதடா சத்யம்! பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரத நாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்தபின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழிசெய்து கொடுத்துவிட்டார் பரதமுனிவர். இந்தப் பரத முனிவர் இருக்கிறாரே, இவர் கண்டுபிடித்த கலை ஒரு பெண் தன்னிடம் நிரம்பியிருக்கும் அழகுகளை எவ்வளவு நாகரிகமாகப் புரிய வைக்கும் கருவியாயிருக்கிறது பார்த்தாயா?" என்று அவன் கூறிய சொற்களிலிருந்து மோகினியின் நாட்டியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/174&oldid=595154" இலிருந்து மீள்விக்கப்பட்டது