பக்கம்:பொன் விலங்கு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 173

அவனையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. மறுபடியும் அரங்கின் உட்புறத்திலிருந்து பக்கத்துப் படிகளின் வழியே அந்தச் சிறுவன் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதை சத்தியமூர்த்தி கவனித்தான்.

"இந்தப் பையன் யார்? நாட்டியம் நிகழ்ந்து கொண்டிருந்த போதும் இவன் உன்னைத் தேடிக்கொண்டு வந்தானே? இப்போதும் உன்னைத்தான் தேடி வருகிறான் போலிருக்கிறது" என்று குமரப்பன் கேட்டபோது சத்தியமூர்த்தி, "எனக்குத் தெரிந்த பையன் நான் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். நான் திரும்பி வந்ததும் நாம் புறப்படலாம். அதுவரை இங்கேயே இரு' என்று குமரப்பனிடம் கூறிவிட்டுத் தானே எதிர்கொண்டு புறப்பட்டுவிட்டான். மேடை யிலிருந்து பின் பக்கத்தில் கிரீன் ரூமிலிருந்தவாறே வெளியே புறப்பட்டுப் போய்விடுவதற்கு வசதியாக வேறொரு சாலையும் வாயிலும் இருந்தன. மேடையின் பின் பகுதிக்கும் அங்கிருந்தே மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கான வாயிலுக்கும் நடுவேயுள்ள பிரதேசத்தில் ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவுக்குள் சத்தியமூர்த்தியை அழைத்துக்கொண்டு போனான்சிறுவன். கிரீன்ரூமில் மோகினியின் தாய் நாட்டிய உடைகளையும் அலங்காரப் பொருள்களையும் சரிபார்த்து மடித்து அடுக்கிக் கொண்டிருந்ததைப் போகும்போது சத்தியமூர்த்தி கவனித்தான். கீரின்ரூமுக்கும் மேடை அரங்கத்துக்கும் நடுவில் இருந்த சிறிய கூடத்தில் நட்டுவனார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பின்புறத்துப் படிகளில் இறங்கியவுடனே எதிரே ஆகாயம் முழுவதையும் நிறைத்துக் கொண்டாற்போல் முழுநிலா எழுந்து வந்திருப்பது தெரிந்தது. படிகளின் அருகே பூமியில் விளைந்த பச்சை விசிறியாக இருபுறமும் பக்கவாட்டில் இலைகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒரு விசிறி வாழை இருந்தது. அந்த விசிறி வாழையின் அருகே மோகினியும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். மிக அருகே எங்கோ மாம்பூப் பூத்து அந்த வாசனையைக் காற்று அள்ளிக் கொணர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலா அதைத் தொங்கவிட்டுத் தாங்கிக் கவிந்து கொண்டிருப்பது போன்ற நீலவானம் - அதன் கீழே விசிறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/175&oldid=595156" இலிருந்து மீள்விக்கப்பட்டது