பக்கம்:பொன் விலங்கு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 177 மணல் மேட்டில் நண்பர்கள் இருவரும் உட்கார்ந்து மனம்விட்டுப் பேசத் தொடங்கினர். ஒடுகால் நீர்ப்பரப்பில் நிலவு பிரதிபலித்து மிதந்து கொண்டிருந்தது மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இண்டர்ல்யூக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இரயிலில் மோகினியைச் சந்திக்க நேர்ந்ததையும் அதன்பின் நிகழ்ந்தவற்றையும் நண்பனிடம் மனம்விட்டுக் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் பெருமூச்சு விட்டான். பிறகு கூறலானான்:

"இந்த உலகத்தில் கருவேலத்து முள்ளைப் போல் ரோஜாமுள் பெரியதாகத் தெரிவதில்லை சத்யம் அதனால் ரோஜாவில் முள்ளே இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? ரோஜா முள்ளுக்குத்தான் வளைவும் கூர்மையும் அதிகம். ரோஜாப்பூவின் அழகு பார்க் கிறவர்களுக்கு அதனடியில் இருக்கும் முள்ளை மறந்து போகச் செய்துவிடுகிறது. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத் திறமையும் அழகும் பூத்துப் பொலியும்போது அவர்களுடைய அடிமனத்தில் உள்ளவேதனைகளும் ஏமாற்றங்களும் உலகத்துக்குத் தெரியாமல் போய் விடுகின்றன. வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்துவிடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது."

"நீயும் நானும் ஆச்சரியப்பட்டு என்ன ஆகப்போகிறது? அநுதாபப்பட்டுத்தான் என்ன ஆகப்போகிறது? தனிமனிதனுடைய அனுதாபங்கள் வெறும் எண்ணமாக எழுந்து நிற்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் குமரப்பன்? ஒரு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட வேண்டுமானால் சமூகத்தின் சக்தி வாய்ந்ததும் ஒன்று பட்டதுமாகிய முழு அநுதாபமும் அந்தப் பிரச்சினையின் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஆனால் நீயும் நானும் இங்கே நம்மைச் சுற்றிப் பார்க்கிற சமூகமே பரிசுத்தமில்லாததாக இருக்கிறதே? நூறு சாதிகள், நூறாயிரம் வேற்றுமைகள், போதாக்குறைக்கு நவீனசாதிகளாக வளரும் அரசியல்கட்சிகள், இவ்வளவும் நிறைந்த சமூகத்தில் அல்லவா நீயும் நானும் வாழ்கிறோம்? பேசுவதைத் தவிர வேறு என்ன செய்கிறோம் நாம்?" -

பொ. வி - 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/179&oldid=595164" இலிருந்து மீள்விக்கப்பட்டது