பக்கம்:பொன் விலங்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பொன் விலங்கு

ஓடமுயன்றவன் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க பையனாக இருந்ததைக் கண்டபோது கோபமும் கொதிப்பும் அடைவதற்குப் பதில் சத்தியமூர்த்தியின் மனத்தில் கருணையும் பரிவுமே ஏற்பட்டன. நெருப்புப்போல் செம்பட்டை படர்ந்திருந்த அந்தப் பரட்டைத் தலையும், இளமையின் மலர்ச்சியில்லாமல் பஞ்சடைத்த கண்களும் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகின்ற முகமுகமாக நின்ற அந்தப் பையனைப் பார்த்துச் சிரித்தான் சத்தியமூர்த்தி. பின்பு அந்தச் சிறுவனை நோக்கி நிதானமாகப் பேசினான்:

"பார்த்தாயா தம்பீ; காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனமறியப் பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கெளரவமாகத் திருடிக் கொண்டிருக்கிற பலர் சமூகத்தில் பிடிபடமாட்டார்கள். உன்னைப் போல் வயிறு பசித்துப்போய்த் திருடுகிற அப்பாவிகள்தான் பிடிபட்டுத் திருட்டுப்பட்டமும் கட்டிக்கொள்வார்கள். இதோ இப்படி என்னோடு வா. நீ திருடிக்கொண்டு போவதற்கிருந்த இந்த சூட்கேஸில் என்ன இருக்கிறதென்று நான் உனக்குக் காண்பிக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே மின்சார விளக்குக் கம்பத்தினடியில் பிளாட்பாரத்தில் இருந்த சிமெண்டு பெஞ்சுக்கு அந்தப் பையனை இழுத்துக் கொண்டு போய் வற்புறுத்தி உட்காரவைத்துத் தன்னுடைய சூட்கேஸைத் திறந்தான் சத்தியமூர்த்தி. பிடிபட்டுவிட்ட அதிர்ச்சியிலும் கம்பீரமாக ஆறடி உயரத்திற்கு வாட்டசாட்டமாக நிற்கும் அந்த சூட்கேஸின் சொந்தக்காரர் தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்திலும் அந்தச் சிறுவனின் உடம்பு வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய குழிந்த கண்கள் மருண்டு நோக்கின.

"இதோ பார்? இது பல்கலைக்கழகப் பட்டம். இதைப் பெறுவதற்காக உழைத்துப் படித்துப் பெற்றுக் கொண்டவனே சில சமயங்களில் இதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அப்படி இருக்கும்போது இதைத் திருடிக்கொண்டு போய் நீ என்ன செய்ய முடியும்? இந்தப்பட்டத்தைத் தவிர வேறு நாலைந்து சர்ட்டிபிகேட்டுகளும் நன்னடத்தைச் சான்றிதழ்களும் இண்டர்வியூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/18&oldid=1405632" இலிருந்து மீள்விக்கப்பட்டது