பக்கம்:பொன் விலங்கு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 193

கிழக்கு முகமாகப் பிரம்மாண்டமான சரஸ்வதி படமொன்று வைக்கப்பெற்றிருந்தது. அந்தப்படத்தின் இரு பக்கங்களிலும் வீணை, தம்புரா, மிருதங்கம் என்று விதம் விதமான வாத்தியங்கள் ஏழெட்டு உறையிடப் பெற்றும் உறையிடப்பெறாமலும் வைக்கப்பட்டிருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணமும் பூக்களின் வாசனையுமாக அங்கே உட்காருவதே மெய்மறந்து பரவசப்படும் அநுபவமாக இருந்தது. கூடத்தில் தனக்கு எதிர்ப்பக்கம் ஒதுங்கினாற்போல் நின்று கொண்டிருந்த மோகினியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி: -

“இத்தனை வாத்தியங்களும் தூசி படிந்து மங்கிப் போய்க் கிடக்கின்றனவே? இவற்றை இங்கு யாரும் எடுத்து வாசிப்பவர்களே இல்லையா?"

"வாத்தியங்கள் மட்டும் இல்லை. இந்த வீட்டில் மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறோம். உங்களைப் போல் சத்தியமும் நேர்மையும் நிறைந்த சுந்தர இளைஞர் ஒருவர் மனம் வைத்தால் வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று இந்த வீட்டில் உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது."

'எந்த வாத்தியத்தைச் சொல்லுகிறீர்கள்?" அவனுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூற மோகினி தயங்கினாள். அவளுடைய முகம் வெட்கத்தால் சிவந்தது. அவளுடைய இதழ்களிலும், கண்களிலும் சத்தியமூர்த்தியே அதுவரை பார்த்திராத விதமானதொரு குறும்புக் குறுநகை விளையாடியது.

"நிஜமாகவே நான் சொல்வது உங்களுக்குப் புரிய வில்லையா?" என்று கடைக் கண்களால் அவனைச் சூறையாடி விடுவதுபோல் பார்த்துக்கொண்டே கேட்டாள் அவள். அவன் இமையாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மதிமுகமும் மலர்விழிகளும் அப்போது ஆயிரமாயிரம் நயங்கள் நிறைந்த காவியமாகி இலங்கின. மிக மென்மையான குரலில் வெட்கம் அதிகமா, அல்லது இனிமை அதிகமா என்று கண்டுபிடிக்க முடியாத நளினமான தொனியோடு அந்த வாக்கியத்தைச் சத்தியமூர்த்தியிடம் கூறினாள் அவள்.

பெ. வி - 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/195&oldid=595201" இலிருந்து மீள்விக்கப்பட்டது