பக்கம்:பொன் விலங்கு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 199

இருக்கமுடியவில்லை. இரயிலில் முதன் முதலாக அவளைச்சந்தித்த தினத்தன்று, அந்த இரவில் அவளுக்கும் அவள் தாய்க்கும் நிகழ்ந்த உரையாடலைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். அவளுடைய மனநிலையும், அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும் அவனுக்கு விளங்கின. "அக்கா படங்களுக்குப் போடறதுக்கு மல்லிகைப் பூமாலை வந்திருக்கு..." என்று பூக்காரன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போன கூடையோடு சிறுவன் உள்ளே வந்தான். மோகினி அந்தக் கூடையை வாங்கி மாலைகளைப் பிரித்தாள். திடீரென்று அந்த வீட்டுக் கூடமே மிகப் பெரிய மல்லிகைத் தோட்டமாகிப் பூத்துக் குலுங்குவதுபோல் நறுமணம் கமழ்ந்தது. அங்கிருந்த சிறிய ஸ்டூல் ஒன்றைச் சுவர் ஒரமாக நகர்த்திப் போட்டுக்கொண்டு அவளுடைய கைகளால் அந்தச் சிறுவனிட மிருந்து மாலையை வாங்கிச் சூட்டும் நளினத்தைச் சத்தியமூர்த்தி கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்குமேலே பின்புறத்துச்சுவரில் ஒரு முருகன் படம் மாட்டியிருந்தது. அந்தப் படத்துக்கு அவள் மாலையைச் சூட்ட வந்தபோது மட்டும் வசதியாக நின்று கொண்டு அவள் மாலையைச் சூட்டுவதற்குத் தான் இடையூறாக இருக்கலாகாது என்ற எண்ணத்தினால் சத்தியமூர்த்தி எழுந்து விலகி நின்றான். படத்துக்கு மாலையைச் சூட்டிவிட்டுத் தான் கீழே இறங்கிய பின்பும் அவன் விலகி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "நீங்கள் உட்காரலாம். ஏன் நிற்கிறீர்கள்?' என்று அவள் நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள். பழையபடி உட்கார்ந்தான் அவன். அப்படி உட்கார்ந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. மேலேயிருந்த படத்தின் ஆணிகளில் சரியாகப் பதியாததனாலோ என்னவோ, முருகன் படத்திலிருந்த மாலை அப்படியே கழன்று இந்த இடத்தில் இப்படித்தான் விழவேண்டும் என்று சொல்லி வைத்து விழுந்தாற் போல சத்தியமூர்த்தியின் கழுத்தில் வந்து விழுந்தது.

ஒரு சிறிதும் எதிர்பாராதபடி நேர்ந்த இந்த நிகழ்ச்சியால், ஏன் அடையவேண்டும் என்று புரியாத ஒருவிதமான அதிர்ச்சியும் அதே ரீதியில் அடைந்த ஒருவிதமான மகிழ்ச்சியுமாகப் பதறிக்கொண்டே அந்த மாலையை அவன் கழற்ற முற்பட்டபோது இரண்டு பூக்கரங்கள் அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/201&oldid=595217" இலிருந்து மீள்விக்கப்பட்டது