பக்கம்:பொன் விலங்கு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பொன் விலங்கு

மாலையை அவன் கழற்றவிடாமல் தடுத்தன. 'கழற்றாதீர்கள். இப்படியே இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது" என்று உணர்வு நெகிழ்ந்த குரலில் அவள் அவனை வேண்டிக் கொண்டாள். ஆயினும் அவள் கைகளைத் திமிறிக் கொண்டு அந்த மாலையை அவசர அவசரமாகக் கழற்றி வைத்துவிட்டான் அவன். அப்படிக் கழற்றி வைத்து விட்டாலும், அந்த இடத்தில் இன்னும் அந்த மாலையோடு சேர்ந்து அவன் எப்படித் தோன்றுவானோ அப்படியே தோன்றுவதாகப் பாவித்துக்கொண்டு பார்ப்பதைப் போல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மோகினி.

'நான் புறப்படுகிறேன். நேரம் அதிகமாகிவிட்டது' என்று மெல்ல எழுந்தான் சத்தியமூர்த்தி.

'நீங்கள் புறப்படுவது இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோள் என்ன ஆயிற்று? ஊருக்குப் போவதற்குமுன் உங்களை நான் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றேனே...?"

"அவசியம் பார்த்தாக வேண்டுமோ?" "அதில் சந்தேகமென்ன? நீங்கள் இங்கிருந்து புறப்படுமுன் கண்டிப்பாக உங்களை இன்னொருமுறை சந்தித்தாக வேண்டும்."

எதற்காக அந்தச் சந்திப்பை அவள் வேண்டுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறவனைப் போல சத்தியமூர்த்தி அவளுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவள் அந்தப் பார்வைக்கு நாணி ஒசிந்து போய்ப் புன்னகை புரிந்தாள்.

'நீங்கள் இவ்வளவு வற்புறுத்திச் சொல்கிறபோது நான் எவ்வாறு மறுக்க முடியும்? ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால் மறுபடியும் உங்களைப் பார்த்துவிட்டுப் போக முயல்கிறேன்" என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான் அவன். மோகினியும் அந்தச் சிறுவனும் வாசற்படி வரை வந்து அவனை வழியனுப்பினார்கள். மிகுந்த நேரம் அதிக சிரத்தையோடு உட்கார்ந்து பேசிப் பழகி ஆறுதலும் அநுதாபமும் கூறவேண்டிய ஓர் உறவை வேகமாக முறித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாற் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/202&oldid=595219" இலிருந்து மீள்விக்கப்பட்டது