பக்கம்:பொன் விலங்கு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 201

உணர்ச்சிதான் அப்போது அவனுக்கு இருந்தது. படத்திலிருந்து தவறி விழுந்த மாலையைக் கழுத்திலிருந்து கழற்றவிடாமல் தடுத்த அவளுடைய பட்டுக் கைகள் இன்னும் தன் தோள்களிலேயே பதிந்து இருப்பதுபோல் உணர்ந்தான் அவன். குமரப்பனுடைய அறை இருக்கிற இடத்துக்குப் போகிற வரை அவன் மதுரையின் வீதிகளில் நடந்து போனான் என்பதைவிட நிகழ்ந்தவை என்ற இனிய ஞாபகங்களின் மேல் மிதந்து, நிகழ இருப்பனவற்றுக்கு ஒர் அவசரத்தைப் படைத்துக் கொண்டு போனான் என்பதுதான் பொருந்தும். மனத்தில் குழப்பமோ சிக்கலோ இல்லாமல் தெளிவான எண்ணங்கள் ஒடும்போது நடையும் ஒட்டமாக இருப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். எண்ணங்களில் சூடேறிச் சிந்தனையோடு நடந்துபோகிற பல சமயங்களில் நடப்பதே ஞாபகமில்லாமல் பறந்திருக்கிறான் அவன்.இன்றும் அப்படிப் பறந்து போய்த்தான் அவன் குமரப்பனுடைய அறையை அடைந்திருந்தான். அவன் போகும்போது குமரப்பன் ஏதோ ஒரு கார்ட்டுன் படத்துக்காகப் பென்சில் வரைபடம் (ஸ்கெட்ச்) போட்டுக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் அப்படியும் இப்படியுமாகக் கோடுகள் இழுத்து அழித்தபின், 'இந்தப் பாழாய்ப் பேர்ன பிரமுகர்...வாழ்க்கையில்தான் சரியான வழிக்கு வராமல் திமிறித் திமிறிப் போய்க் கொண்டிருந்தார் என்றால் படத்திலுமா அப்படி இருந்து தொலைக்க வேண்டும்? நானும்தான் அரை நாழிகையாகக் கோடிழுத்துப் பார்க்கிறேனடா சத்யம்; ஒரு கோட்டிலுமே பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கிறார் இவர்' என்று கூறிச்சரியாக வராத அந்தக் கார்ட்டுனைத்துக்கி எறிந்தான் குமரப்பன்.

'சரி நாம் புறப்படலாம் வா...இந்தப் பிரமுகரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். திரும்ப வந்த பிறகாவது இவர் வழிக்கு வருகிறாரா என்று பார்க்கிறேன்' என்று கையில் இருந்த பென்ஸிலையும் அந்தக் காகிதத்தின்மேல் வெறுப்போடு வீசி விட்டுச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் குமரப்பன். நண்பர்கள் இருவரும் கீழவாசலுக்குப் போய் அம்மன் சந்நிதி முன்புறம் உள்ள சில துணிக்கடைகளில் படியேறி இறங்கினார்கள். துணிமணிகளை வாங்கிக்கொண்டு அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/203&oldid=595221" இலிருந்து மீள்விக்கப்பட்டது