பக்கம்:பொன் விலங்கு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொன் விலங்கு

எச்சரிப்பதற்கும் தான் யார்? தனக்கென்ன உரிமை? என்று நடுநடுவே மனம் தயங்கியது. கருணையும் பரந்த நோக்கமும் உள்ளவனுக்கு உரிமையும், உறவும் பார்த்துத்தான் மனிதர்கள் மேல் இரக்கப்படத் தெரிய வேண்டும் என்பதில்லை. யாருக்குத் துன்பம் வந்தாலும் இரக்கப்படத்தான் வேண்டும். இந்த விதமான எண்ணங்களோடு அவன் மோகினியின் வீட்டுக்குள் படியேறிச் சென்றபோது அவள் அவனை எதிர்பார்த்துத் தனியாகக் காத்திருந்தாள். தன்னைப் பார்த்ததும் அவள் அடைந்த உற்சாகத்தைக் கண்டு சத்தியமூர்த்தியே அயர்ந்து போனான். வழக்கம்போல் காப்பி சிற்றுண்டி உபசாரத்துக்குப் பின் கேட்கலாமா, கேட்கக்கூடாதா என்று தயங்கிக் கொண்டே அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் சத்தியமூர்த்தி: 'கண்ணாயிரத்துக்கும் உங்கள் வீட்டுக்கும் என்ன தொடர்பு என்று நான் தெரிந்து கொள்ளலாமா? தயவு செய்து இந்தக் கேள்வியை எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள அனுதாபத்தின் மிகுதியால்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்."

'தொடர்பாவது ஒன்றாவது? ஏதோ வருகிறார்.போகிறார். அவரால்தான் இந்த உலகமே நின்றுவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அம்மாவுக்கு ஒரு பிரமை, சபைகளிலும், பொருட்காட்சிகளிலும் நாட்டியத்துக்குக் கூப்பிடுகிறவர்கள் கண்ணாயிரம் சொல்லித் தூண்டுவதால்தான் கூப்பிட வருவதாக அம்மாவை அவரே நம்ப வைக்கிறார். என்னை அப்படியே சினிமா வானில் இலட்ச இலட்சமாகப் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாற்றிவிடப் போவதாக அம்மாவிடம் அவர் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டு திரிகிறார். கூந்தல் தைல விளம்பரம், வாசனைச் சோப்பு விளம்பரம், பட்டுப் புடவை விளம்பரம் என்று எதன் பெயரைச் சொல்லியாவது கண்ணாயிரம் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கிறார். இவை எல்லாம் பிடிக்காமல் இருந்தும் பிடித்திருப்பதுபோல் அங்கீகரித்துக்கொண்டு சாக மாட்டாமல் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று மோகினி அவனுக்கு மறுமொழி கூறியபோது கண்ணாயிரத்தின் மேலிருந்த வயிற்றெரிச்சல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டது. பொறுமை யிழந்துதான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/208&oldid=595231" இலிருந்து மீள்விக்கப்பட்டது