பக்கம்:பொன் விலங்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

19

பசுமையினிடையே வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையில் போகும்போது சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்தப் பயணமே பெருமிதத்துக்குரியதோர் அநுபவமாகத் தோன்றியது. சாலையின் இருபுறமும் எங்கெங்கிருந்தோ பறவைகளின் இனிய ஒலிகளும் நீர் சலசலத்து ஓடும் ஓசைகளும் தந்தியிலிருந்து பிரிந்த நாதத்தைப்போல் விடுபட்டு வந்த இனிமையாய்ப் பிறந்த இடத்துச் சுவடு இல்லாமல் வந்து பரவிக்கொண்டிருந்தன. செளந்தரியம் இறைபட்டுக் கிடக்கும் அந்த மலைகளின் வழியே பயணம் செய்து மல்லிகைப் பந்தலை அடைந்தபோது பத்தேகால் மணிக்குமேல் ஆகிவிட்டது. பள்ளத்தாக்கில் இறங்கி ஊருக்குள் புகுந்து நிலையத்தில் பஸ் நின்றவுடன் சத்தியமூர்த்தி அவசரமாகப் புறப்பட்டான். நான்கு புறமும் மலைகளுக்கு நடுவில் இப்படி அமைந்திருப்பதைவிட வேறெந்த விதமாக அமைந்திருந்தாலும் அழகாயிராதென்பதுபோல் அவ்வளவு கச்சிதமான அழகுடன் அமைந்திருந்தது மல்லிகைப் பந்தல். ஊரிலிருந்து சற்றே விலகி மலைச் சரிவில் கட்டப்பட்டிருந்த பூபதிக் கலைக் கல்லூரிக்குச் சத்தியமூர்த்தி போய்ச் சேர்ந்தபோது பத்தரை மணிக்கு மேலும் மூன்று நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. அங்கே கல்லூரி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தார்.

"கல்லூரி அதிபர் பூபதி அவர்களுக்கு உடல் நலக்குறைவாக இருப்பதால் இண்டர்வியூவை அவரது பங்களாவிலேயே நடத்திவிட ஏற்பாடாகியிருக்கிறது. பிரின்ஸிபாலும் அங்கேயே போய்க் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களை எதிர்பார்த்துத்தான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வந்தவுடன் அங்கே அழைத்துக் கொண்டுவரச்சொல்லியிருக்கிறார்கள். புறப்படலாமா?" என்று சத்தியமூர்த்தியை எதிர்கொண்டார் அவர்.

அவன் கல்லூரிக் கட்டிடத்துக்குள் நுழைந்ததுமே அவனை இன்னாரென்று விசாரித்துத் தெரிந்து கொண்டவுடனேயே அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் அவர். தாமதமாக வர நேர்ந்ததற்காகக் கல்லூரி அதிபரிடமும் முதல்வரிடமும் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/21&oldid=1405640" இலிருந்து மீள்விக்கப்பட்டது