பக்கம்:பொன் விலங்கு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 211

கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குள் பலமுறை தயங்கி யிருக்கிறேன். நான். அப்படித் தயங்குவதும் நியாயம் தானே? உலகத்தில் இரண்டு விதமான அன்பு உண்டு. மழையைப்போல் எப்போதாவது பெய்து நின்று விடுகிற அன்பு. சூரியனைப்போல் நாள் தவறாமல் தோன்றுகிற அன்பு, மழையைப்போல் பெய்து பெய்து நின்றுவிடுகிற அன்பைத்தான் உன் தாய் உனக்கு உபதேசம் செய்திருக்கிறாள். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டிருக்கிற அன்பும் அப்படிப்பட்டதுதான்."

"நான் புரிந்துகொண்டிருக்கிற அன்பு அப்படிப்பட்டது இல்லை. சத்தியமானது. என்னையே நான் அர்ப்பணித்திருப்பது!”

"இருக்கலாம் மோகினி ஆனால், ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை நீயும் நானும் இன்றும் நாளையும் என்றும் கேட்கலாம்."

மோகினியிடமிருந்து அவனுக்கு மறுமொழியில்லை. பதில் சொல்லாமல் மெல்ல விசும்பி அழத் தொடங்கியிருந்தாள் அவள். கவரில் சிரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான முருகன் படம். ஒரு மூலையில் மெளனமாய் வைத்தது வைத்தபடியே கிடக்கும் வாத்தியங்கள்-இவற்றையெல்லாம் மாறி மாறிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த அழுகையைத் தாங்காமல் அருகில் நெருங்கித் தயங்கி நடுங்கும் கையால் அவள் தோளைத் தொட்டுக் கூறினான் அவன். -

"இதோ! என்னை நிமிர்ந்து பார், மோகினி உன்னை அழவைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வாக்கியங்களை நான் கூறவில்லை. உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல்தான் இன்று இரண்டாவது முறையாகவும் இந்த வீட்டுக்கு நான் வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/213&oldid=595243" இலிருந்து மீள்விக்கப்பட்டது