பக்கம்:பொன் விலங்கு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 213

அவள்தானே என்ற முறையில் மோகினியின்மேல் கோபமும் வந்தது அவனுக்கு.

வீதியோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தவன் ஏதோ ஒரு பெரிய கடையில் முன்புறமாக இருந்த கண்ணாடியில் திரும்பும் போது தற்செயலாகத் தெரிந்து பிரதிபலித்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். கையில் நீலக்கல் மோதிரமும் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஆளே திடீரென்று புது மாப்பிள்ளையாக மாறிவிட்டாற் போலத் தோன்றியது. ஒரு கணம் அந்தத் திலகத்தை அழித்துவிடுதற்காக அவன் கை மேலே உயர்ந்தது. ஆனால் அப்படி அழிப்பதற்கும் மனம் துணியவில்லை. அதை அழிப்பதால் மனப்பூர்வமாகவும் அந்தரங்க சுத்தியோடும் செய்யப்பட்ட ஒரு மரியாதையை அவமதிப்பதாக உணர்ந்து மேலே எழுந்த கை தானாகவே தாழ்ந்தது. பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய இதயத்தை மிக மென்மையாகத் துளைப்படுத்தும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். கழற்றவும் முடியாமல் கட்டிக்கொள்ளவும் முடியாமல் தவிக்க விடுகிற அந்த விலங்கு தன்னையும் இப்போது பிணித்திருப்பதைச் சத்தியமூர்த்தி நன்றாக உணர்ந்தான். நானும் கட்டுண்டேன் நானும் கட்டுண்டேன் என்பதை நிரந்தரமாக ஞாபகப்படுத்துவதைப்போல் அந்த மோதிரம் அவன் கையில் மின்னிக் கொண்டிருந்தது. இப்படி ஒரு சந்திப்பும் உறவும் என் வாழ்வில்தானா ஏற்பட்டிருக்கிறது?’ என்பதை நினைத்து ஒரு கணம் தயங்கிப் பெருமூச்சு விட்டபின், 'என் வாழ்வில்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவன் அந்தரங்கமாக ஒப்புக் கொண்டே ஆக வேண்டியிருந்தது. அன்று மாலை அவனும் குமரப்பனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். மறுநாள் மாலை மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுமுன் சத்தியமூர்த்தியை இரயில் நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றான் குமரப்பன். ஊருக்குப் புறப்படுகிற நாள் மிகவும் தொலைவில் இருப்பதுபோல் தோன்றிவிட்டுக் கடைசியில் அருகில் வந்து நான் மிகவும் அருகில்தான் இருக்கிறேன் என்று நெருங்கி நின்றாயிற்று. அன்று இரவு நெடுநேரம் வரை அப்பாவும், அம்மாவும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். வேலையைத் தேடி வெளியூர் போகிற பிள்ளையைப் பெற்றோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/215&oldid=595247" இலிருந்து மீள்விக்கப்பட்டது