பக்கம்:பொன் விலங்கு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 215

லீவுக்கு ஊர் போய்விட்டு மீண்டும் திரும்புகிற சிலரும் பஸ்ஸில் உடன் பயணம் செய்தார்கள்.

விடுமுறைக்காலம் என்ற சுதந்திரம் முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்புகிற மாணவ இளைஞர்களின் பேச்சும் சிரிப்புமாகப் பஸ்ஸில் ஓர் ஆரவாரம் இடையறாமல் இருந்தது. அதே கல்லூரியில் தாவர இயல் (பாடனி) விரிவுரையாளராக வேலை ஏற்றுக்கொள்ளவரும் இளைஞர் ஒருவரும் பொருளாதார விரிவுரையாளராக வேலை ஏற்றுக்கொண்டு இரண்டு மூன்றாண்டுகளாக வேலை பார்த்துவரும் நடுத்தர வயதினர் ஒருவரும் பஸ்ஸில் சத்தியமூர்த்திக்கு அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தற்செயலாகப் பயணத்தின்போது ஒருவரையொருவர் விசாரித்ததில் அது தெரிந்தது.

"இந்த உத்தியோகத்தில் ஒரு சுகமும் இல்லை. ஏதோ வேறு வழி இல்லாத காரணத்தால் கல்லூரி ஆசிரியராக வந்து மாட்டிக்கொண்டு விட்டேன். ஏதாவது ஒரு கம்பெனியில் சின்ன உத்தியோகம் பார்த்துக்கொண்டு போயிருந்தால்கூட இதற்குள் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும்' என்று பொருளாதார விரிவுரையாளர் சத்தியமூர்த்தியிடம் அலுத்துக்கொண்டார். வாழ்க்கையே பணத்தைக் கொள்ளையடித்துக் குவிப்பதற்காக அளிக்கப்படுகிற ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைப்பதாகப் பட்டது சத்தியமூர்த்திக்கு. ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையின் இலட்சியத்தில் மனப்பிடிப்பு இல்லாதவர்கள் ஒட்டிக் கொண்டு வேதனைப்படுவதைப்போல் நாட்டுக்கு மொத்தமான துன்பம் வேறு இருக்கமுடியாது என்று நினைத்தான் அவன். சொந்தக் கசப்பை வெளியிடுவதற்கு மட்டும் தான் வாய் திறந்து பேசவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காகவே பிறரோடு உரையாடுகிறவர்களைச் சத்தியமூர்த்தியால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பொருளாதார விரிவுரையாளரோடு பேசுவதை தவிர்ப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தபடியே தூங்குவதுபோல பாவனை செய்யலானான் அவன். பின் பக்கத்திலிருந்து மாணவர்களின் உற்சாகமான பேச்சுக் குரல் கேட்டது. வற்றல் குழம்பு' என்று கெளரவப் பெயர் சூட்டப்பெற்ற ஒரு பேராசிரியரைப் பற்றி அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/217&oldid=595251" இலிருந்து மீள்விக்கப்பட்டது