பக்கம்:பொன் விலங்கு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பொன் விலங்கு

ஒன்பது மணிக்குள் அவன் மறுபடி லேக் அவென்யூவுக்கு வந்து அந்த ரொட்டிக் கிடங்கின் மாடியறையில் அவசர அவசரமாகக் குடியேறிவிட்டான். அங்கே வந்து தங்கி விட்டதை உறுதிப்படுத்தும் நிச்சயமான சாட்சியைப்போல் மாடிவராந்தாவில் நிறைந்திருந்த சண்பகப் பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் நீலப்பெரும் பரப்பாய் ஏரி தன் அழகிய சிறிய அலைகளை மடித்துக் கொண்டு கிடந்தது. கீழே ரொட்டிக் கிடங்கிலிருந்து சர்க்கரைப் பாகு முறுகுவது போன்ற ஒருவித வாசனையும் வந்து பரவிக் கொண்டிருந்தது. அதைத் தனி அறையாகத் தன் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக்கொண்டு நாற்பத்தெட்டு ரூபாய் நிச்சயமாக அவனால் கொடுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியூரிலிருந்து தனிக்கட்டையாக அங்கு தன்னைப் போலவே வந்திருக்கும் ஆசிரியர்களையோ அல்லது வேறு மனிதர்களையோ-இரண்டு பேரை உடன் வசிப்பவர்களாகச் சேர்த்துக்கொண்டு விடவேண்டும் என்று அவன் தனக்குள் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அன்று முதல்நாளாக இருந்ததனால் பதினோரு மணிக்குக் கல்லூரி திறப்பதாக அறிவித்திருந்தார்கள். லேக் அவென்யூவிலிருந்து கல்லூரிக் காம்பவுண்டை அடைவதற்கு அரைமணி நேரமோ, அல்லது அதற்கும் சிறிது குறைவான நேரமோ நடந்து போக வேண்டியிருக்கும் என்று தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டே நடந்து போவதற்கு ஏற்ற சுகமான சாலை அது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை அந்தச் சாலை வழியே நடந்து போய்த் திரும்ப வேண்டியிருக்குமே என்பதை எண்ணிச் சத்தியமூர்த்தி மகிழ்ச்சி அடைந்தானே தவிரக் கவலைப்படவில்லை. அறைக்குள் மொத்தம் நான்கு அலமாரிகள் இருந்தன. ஒன்றில் தன் புத்தகங்களைப் பிரித்து அடுக்கினால் அவன். தன்னுடைய பொருள்களை எல்லாம் அந்த அறைக்குள் ஒழுங்குபடுத்தி வைத்தபின் நீராடச் சென்றான். மல்லிகைப் பந்தலின் குளிர்ந்த நீர் பட்டுப் போல் மென்மையாயிருந்தது. குழாயைத் திறந்ததும் குளிர்ந்த நீர் சில்லென்று சிலிர்த்துக் கொண்டு கொட்டியது. அவ்வளவு அருமையாகத் தண்ணீர் ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/228&oldid=595275" இலிருந்து மீள்விக்கப்பட்டது