பக்கம்:பொன் விலங்கு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பொன் விலங்கு

எடுத்துக்கொண்டு வந்திருக்கவேண்டாம்" என்று குறும்பு தொனிக்க மறுமொழி கூறினான். இதைக் கேட்டு அவள் கன்னங்களில் செம்மை குழம்பி நாணம் கனிந்தது. அவ்வளவு பெரிய செல்வச் செருக்கு நிறைந்த வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தும் அவளிடம் மிக மென்மையான நாணமும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி மகிழ்ந்தான். பெண்களை ஆண்கள்போலப் பிறரிடம் பழகுவதற்குப் பழக்கப்படுத்தி விட்டு ஆண்கள் விலகியிருந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் பெரிய குடும்பங்கள் பலவற்றைச் சத்தியமூர்த்தி பரிதாபத்தோடு பார்த்திருக்கிறான். மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வதுபோல் அதிகம் விலகி விடாமலும், அதிகம் நெருங்கி விடாமலும் பழகவேண்டும் என்று இண்டர்வ்யூவின் போது பூபதி கூறியிருந்த வாக்கியங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. இதயங்கள் மலர எண்ணங்கள் மலர மெய்யான பிரியத்தைச் சுமந்துகொண்டு எதிரே வந்து நிற்கும் பாரதியையும், அவளுடைய தந்தையின் அறிவுரையையும் இணைத்து நினைத்தபோது அவனுடைய நினைப்பு ஒழுங்காக வராமல் நடுவில் ஏதோ சிறிது தடுமாறியது. அந்தப் பெண் அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பார்த்துப் பேசத் தவிப்பதையும் எப்படிக் குறைத்துக்கொள்ளச் செய்யலாமென்று நேற்றிலிருந்தே ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் காரணமில்லாமலே தம்மேல் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் இந்தப் பெண் தேடி வருவதும், பார்ப்பதும் சிரிப்பதும் அவர்களுடைய பொறாமையை மேலும் வளர்த்து விபரீதமாக்கிவிடக் கூடாதே என்று அவன் தயங்கினான். நாணமும் அச்சமும் மடநாய்களுக்கும் அன்றோ வேண்டும் என்று பாரதியார் ஆவேசமாகப் பாடியிருந்தாலும் சமூக வாழ்க்கையில் ஆண் மகனும்கூட அச்சமும் நாணமும் படவேண்டிய இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பழிவருகிற இடங்களை நினைத்தால் பயப்படாமலும் நாணப்படாமலும் இருக்க முடியாது. தன் மனத்தையும், நேர்மையையும் அரித்துத் தின்று விடுகிற சபலங்கள் தீரனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் குறுக்கிடக்கூடாது. புகழோடு வாழமுடியாமற் போகலாம்; ஆனால் பழியில்லாமல் வாழவேண்டும். பழியில்லாமல் வாழ்வதே வீரம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/232&oldid=595285" இலிருந்து மீள்விக்கப்பட்டது