பக்கம்:பொன் விலங்கு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 235

சொல்லிக்கொண்டிருந்த போது முதல்வரின் அறையிலிருந்து மணி அடிக்கப் பெற்றுக் கூப்பிடும் ஒலியைக் கேட்டு ஹெட்கிளார்க் எழுந்து ஓடினார். அவர் திரும்பி வருகிறபோது வரட்டும் என்று பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி, பெரிய பெரிய ஸ்டீல் பீரோக்களும், பைல்களும் புத்தகங்களும் அடுக்கிய அலமாரிகளுமாக நிறைந்திருந்த அந்தக் கூடத்தில் ஹெட்கிளார்க்கைத் தவிர வேறு சில அலுவலர்களும் அமர்ந்திருந்தார்கள். சாயம் பூசிக் கனிந்த கைவிரல் நகங்கள் டைப்ரைட்டர் மேல் சுறுசுறுப்பாக ஓடி மின்னும்படி டைப் செய்து கொண்டிருந்தாள் ஒர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. கல்லூரி முதல்வரின் அறைக்குள்ளிருந்து திரும்பிய ஹெட்கிளார்க் அந்த லேடி டைப்பிஸ்ட்டின் அருகில் சென்று ஏதோ நாலைந்து காகிதங்களைக் கொடுத்து விவரம் சொல்லிவிட்டுப் பின் மீண்டும் தம் இடத்துக்கு வந்தார். மேசை இழுப்பறையைத் திறந்து ஏதோ அச்சிட்ட தாள்களை எடுத்தார்.

'இப்போது நல்லவேளை இல்லை போலிருக்கிறதே, இராகுகாலம் முடிந்ததும் நீங்கள் 'ஜாயினிங் ரிப்போர்ட்"டில்' கையெழுத்துப் போடுகிறீர்களா?' என்று சொல்லித் தயங்கினார் ஹெட்கிளார்க், சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நகைத்தான்.

'துணிவோடும் நம்பிக்கையோடும் வாழ்ந்தால் எல்லா வேளையும் நல்ல வேளைதான். எல்லாக் காலமும் நல்ல காலம்தான். இந்த நூற்றாண்டில் வாழ்க்கையே ஓர் அவசரமான சந்தர்ப்பமா யிருக்கிறது. அப்படியிருக்கும் போது நேரத்தின் மேலும் காலத்தின் மேலும் விருப்பு வெறுப்புக்கொண்டு என்ன சாதித்துவிடப் போகிறோம்?' என்று அவன் கூறியதைக் கேட்டு ஹெட்கிளார்க் அவனை சந்தேகக் கண்களோடு உற்றுப் பார்த்தார். 'ஆள் சுத்த சுயமரியாதைக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே என்று அந்த ஹெட்கிளார்க் தன்னைப் பற்றி அப்போது மனத்தில் வெறுப்பாக நினைப்பதை அவருடைய முகத்திலிருந்தே சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஹெட்கிளார்க்கின் வாய்ச் சொற்கள் மட்டும் மிகவும் நாசூக்காக அவனைப் பாராட்டுவதுபோல் வெளி வந்தன. 'சார் ரொம்பவும் சீர்திருத்த மனப்பான்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/237&oldid=595295" இலிருந்து மீள்விக்கப்பட்டது