பக்கம்:பொன் விலங்கு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பொன் விலங்கு

உள்ளவராக இருப்பீர்கள்போல் தோன்றுகிறது' என்று சிரிப்போடு சிரிப்பாகச் சேர்த்து விஷமத்தனமாகக் கூறியிருந்தார் அவர். அவருடைய வாய் அப்படிச் சொல்லியிருந்தாலும் மனத்தில் உள்ளுர, பயல் பெரிய சுனா 'ம'னாவாக இருப்பான்போல் இருக்கே'- என்றுதான் அவர் நினைத்திருக்க வேண்டுமென்பதைச் சத்திய மூர்த்தியால் உய்த்துணர முடிந்தது.

'இந்த உலகத்தில் மனிதன் உயிர்வாழ்கிற காலமே நல்ல சொப்பனத்தைப்போல் மிக மிக வேகமாகவும் சுருக்கமாகவும் ஓடி விடுகிறது. அதிலும் முக்கால் வாசி நேரத்தை இராகுகாலம் எமகண்டம் என்று ஒதுக்கி விட்டால் முயற்சிக்கும் உழைப்புக்கும் மீதியிருக்கிற நேரம்தான் ஏது?' என்று தன் கருத்தையோ தன்னையோ அவர் தப்பாகப் புரிந்து கொள்ளாத வகையில் மேலும் தெளிவாக விளக்கிச் சொன்னான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் அவனுடைய விளக்கத்தைக் கேட்டுக்கொள்ளத் தயாராயில்லை.

'எனக்கென்ன வந்தது! உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்' என்று ஜாயினிங் ரிப்போர்ட்டையும், கல்லூரி நிர்வாகத்தினர் ஆசிரியர்களோடு செய்து கொள்ளும் வழக்கமான உடன்படிக்கைத் தாளையும் எடுத்து அவனிடம் நீட்டினார் ஹெட்கிளார்க். அவற்றை வாங்கிப் படித்து விட்டுப் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களை விரைந்து பூர்த்தி செய்து கையொப்பமிடுவதற்கு முன் யுவர்ஸ் ஒபிடியண்ட்லி- (தங்கள் பணிவுள்ள) என்றிருந்த இடத்தை யுவர்ஸ் ட்ருலி (தங்கள் உண்மையுள்ள) என்று அடித்துத் திருத்தி விட்டுக் கையொப்பமிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கையொப்பமிட்டுக் கொடுத்தவற்றை வாங்கி மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு அதே பழைய வஞ்சகச் சிரிப்போடு உள்ளடங்கிய ஆத்திரம் தொனிக்கும் குரலில் அவனிடம் கேட்டார் ஹெட்கிளார்க்:

"இப்படி அடித்துத் திருத்தியிருப்பதனால் நாங்கள் உங்களிடம் 'ஒபிடியண்டை (பணிவு) எதிர்பார்ப்பதற்கில்லை என்று அர்த்தமா? அல்லது உலகத்திலேயே நீங்கள்தான் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் கண்டிப்பாக புரிந்து கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?”

"பணிவுள்ளவர் போல் குழைந்து நெகிழ்ந்து பேசித் திரிகிறவர் களும், உண்மையில் அப்படியில்லாமல் ஏமாற்றுவதில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/238&oldid=595297" இலிருந்து மீள்விக்கப்பட்டது