பக்கம்:பொன் விலங்கு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பொன் விலங்கு

'டி.பார்ட்மென்ட் அறையிலிருந்து புறப்பட்டு எல்லா ஆசிரியர்களும் பொதுவாக தங்கி ஒய்வு கொள்ளும் ஓய்வுக் கூடத்துக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. முதல் நாள் இரவு பஸ்ஸில் உடன் பயணம் செய்த பொருளாதார விரிவுரையாளர் தாமாகவே அவனைத் தேடி வந்து வலுவில் பேசத் தொடங்கினார். அவன் கேட்காமலிருக்கும் போதே அவராகவே கல்லூரி நிர்வாகி பூபதியைப் பற்றியும், முதல்வரைப் பற்றியும் ஏதேதோ அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலானார்.

"பூபதி ரொம்ப ஷார்ட் டெம்பர்ட் (விரைவில் உணர்ச்சி வசப்படுகிறவர்) மேன். அவர் நல்லதைக் கொண்டாடும்போது பிறர் சந்தேகப்படும்படியாக அளவு மீறிக் கொண்டாடுவார். இது நல்லதில்லையே என்று பிறர் வெறுக்கிறவற்றை அவர் நல்லதில்லை என்று புரிந்து கொண்டு வெறுக்க அதிக நேரம் பிடிக்கும். திடீரென்று கல்லூரிக்கு வருவார். விரிவுரையாளர்களோ, மாணவர்களோ அறியாதபடி வகுப்பறைக்கு வெளியே நின்று விரிவுரைகளைக் கேட்பார். எந்த விரிவுரையாவது அவரை மிகவும் கவர்ந்து விட்டதோ அந்த விரிவுரையை நிகழ்த்திய ஆசிரியனை அவர் கொண்டாடிப் புகழ்கிற வேகத்தைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் அவனை வெறுத்துப் பொறாமைப்படுகிற அளவுக்குச் செய்து விடுவார். வெறுக்கத் தொடங்கினாலும் அப்படித்தான். ஒன்றை விரும்புவதிலும் சரி வெறுப்பதிலும் சரி அவர் போய் நிற்கிற எல்லை எதுவோ அது மற்றவர்கள் அணுக முடியாததாயிருக்கும். அவருடைய மகிழ்ச்சியையும் தாங்கிப் பொறுத்துக்கொள்ள முடியாது. கோபத்தையும் தாங்கிப் பொறுத்துக்கொள்ள முடியாது. மேன் ஆஃப் மூட்ஸ்'. நிரம்ப எக்ஸ்ைட்மெண்ட் உள்ளவர், குண்டூசி குத்துகிற நேரத்தில் மாறி விடுவார். ஏன் மாறினார் என்று காரணமும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறிவிடுவார்.”

'அதனால் என்ன சார்? மனிதர்கள் தாங்களும் பலா பலங்கள் உள்ள வெறும் மனிதர்களாகவே இருக்கிற வரை இன்னொரு மனிதனைப் பற்றி இப்படி விமர்சனம் செய்து என்ன ஆகப் போகிறது?' என்று அந்தப் பேச்சை அவ்வளவில் நிறுத்த முயன்றான் சத்தியமூர்த்தி. அப்படியும் அவர் தமது பேச்சை நிறுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/242&oldid=595307" இலிருந்து மீள்விக்கப்பட்டது