பக்கம்:பொன் விலங்கு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பொன் விலங்கு

இன்னொருவர் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தராசு ஆக்கி நிறுப்பது எவ்வளவு நல்லது என்று விளங்கிக் கொள்ள முடியாமல் தயங்கினான் அவன். சொந்த விருப்பு வெறுப்புக்களை அளவு கருவியாகக் கொண்டு நிறுக்காமல் சம்பந்தப்பட்டவர்களின் குணங்களையோ குணக் கேடுகளையோ நிறுத்து விமர்சனம் செய்வதை அவன் வெறுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனையும் பற்றிச் சமுதாயமே இப்படி ஒரு விமர்சனத்தைத் தயாராக வைத்திருக்கும். யாரும் அதைத் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பவும் முடியாது. சிலரைப்பற்றி ஒரு சமுதாய விமர்சனமும் வெளிவராது. வேறு சிலரைப்பற்றி ஏதாவது ஒரு சமுதாய விமர்சனம், மொத்தமாக வெளி வராமலிராது. மனிதனை, நல்லவனாகவோ கெட்டவனாகவோ தீர்மானம் செய்கிற உரிமை நல்லதும் கெட்டதும் தன்னிடமே உள்ள ஒரு தனிமனிதனிடம் விடப்படுவதைக் காட்டிலும் பல தனிமனிதர் சேர்ந்த சமூகத்தினிடம் விடப்படுவது உத்தரவாதமுள்ள காரியமென்று தோன்றியது. பொருளாதார விரிவுரையாளர் பேசிய பேச்சுக்கள், சொந்த விருப்பு வெறுப்பிலும் விரக்தியிலும் பேசப் பெற்றதாகப் படவே அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாகாது என்று எண்ணிப் போகப் போக இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பு நேரும், என்பதாக நம்பினான் சத்தியமூர்த்தி. தன்னைப் போலவே புதிதாக வந்திருப்பவரும் பயந்த சுபாவமுள்ளவராகத் தோன்றுகிறவருமாகிய பாடனி விரிவுரையாளர் ஒரு மூலையில் ‘புது மணப்பெண் போன்ற வெட்கத்தோடு கூசிக்கொண்டே உட்கார்ந்து ப்ளான்ட் அனாடமி' என்ற 'பாடனி புத்தகத்தைக் கர்மசிரத்தையாகப் படிப்பதுபோல் பாவித்துக் கொண்டு அதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தம்மைப் பிரித்துக் காப்பாற்றிக் கொண்டவராக ஒதுங்கி இருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். இன்னும் நாலைந்து விரிவுரையாளர்கள் ஒரு பக்கம் கூட்டமாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு கோடை விடுமுறைக்குப் பின் பிரின்ஸிபால் திடீரென்று ஏன் தாடி வளர்க்கத் தொடங்கினார்? என்பதைப் பற்றி அரட்டையும் சிரிப்புமாக வம்பளந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து குபீர் குபீரென்று எழும் சிரிப்பலைகளால் கட்டடமே அதிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/244&oldid=595311" இலிருந்து மீள்விக்கப்பட்டது