பக்கம்:பொன் விலங்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23

மலரும் அந்தக் கண்கள் வெளியே தெரியத் தொடங்கியிருந்த அவனுடைய அழகிய நீண்ட நளினமான ரோஜா நிறப் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற பக்கமாகவே பூபதி அவர்களுடைய பார்வையும் திரும்பிச் சென்றது. சத்தியமூர்த்தி தலையைக் குனிந்து கொண்டான்.

zபாரதி இப்படி வா... அம்மா...x என்று அவர் உட்புறமாகத் திரும்பி மெல்ல அழைப்பதைக் கேட்டுத் தலை நிமிர்ந்த சத்தியமூர்த்தி மீண்டும் ஆனந்தம் பூக்கும் அந்தக் கண்களைச் சந்தித்த போது இன்னும் அவை அவனது நீண்ட அழகிய சிவப்புப் பாதங்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.


 2

பெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.

பரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள்தாம் அவை, வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கி விட்டு வெளியில் வந்த அந்தப் பெண், திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/25&oldid=1509697" இலிருந்து மீள்விக்கப்பட்டது