பக்கம்:பொன் விலங்கு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பொன் விலங்கு

வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எதிர்காலத்தில் திடமான நம்பிக்கை கொள்ளச் செய்யும் அந்த இளைஞர்களின் ஆர்வம் சத்தியமூர்த்திக்கு மிகவும் இதமாயிருந்தது. பகல் இரண்டரை மணிக்கு அவன் உணவு விடுதியிலிருந்து திரும்பியபோது தமிழ்த்துறைத் தலைவர் காசிலிங்கனார் ஆசிரியர்கள் அறையின் முகப்பில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களோடு இரண்டு நிமிஷம் தனியாகப் பேசவேண்டும்" என்ற வேண்டுகோளுடன் அவனை அணுகினார் அவர். அவர் அருகில் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த மிஸ் வகுளாம்பிகை 'புரொபஸர் நான் உங்களை அப்புறம் பார்க்கிறேன்' என்று குறிப்பறிந்து விலகிச் சென்றாள். சத்தியமூர்த்தியை ஒரு பக்கமாகத் தனியே அழைத்துச் சென்று தாம் சொல்ல வேண்டிய செய்தியை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லி முடிப்பதென்ற தயக்கத்தோடு ஏதோ ஒரு விதத்தில் வார்த்தைகளைப் பின்னிப் பின்னிப் பேசலானார் காசிலிங்கனார்.

'இப்போது நான் சொல்லப் போவதெல்லாம் நம்முடைய “டமில் டிபார்ட்மென்ட்'டின் நன்மைக்காகத்தான். தயவுசெய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மென்ட்டுக்குத் தொடர்புடைய ஏதாவது ஒரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள். பாடத் திட்டங்களும், யார் யாருக்கு எந்த வகுப்பு என்பதும் இன்னும் முடிவாகவில்லையானாலும், போகிற வகுப்பு எதுவாயிருந்தாலும் நான் சொல்கிறபடி செய்து விடுவது நல்லது. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இன்று காலையில் நீங்கள் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு...ஏதோ ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தினீர்களாம். கல்லூரி நிர்வாகி அதைக் கேட்டுவிட்டுப் பிரின்ஸிபாலிடம் போய் உங்களை ஒரேயடியாக தூக்கி வைத்துப் பேசிக் கொண்டாடியிருக்கிறார். 'இங்கிலீஷ் டிபார்ட்மென்ட்டுக்குப் புதுப்புது 'டிச்சிங் மெத்தேட்ஸ்' (கற்பிக்கும் வழிமுறைகள்) தெரிவதற்காக வருஷத்துக்குப் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் ரெபரன்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீர்களே? மாணவர்கள் மனத்தில் பதியும்படியான அழகுணர்ச்சியோடு காலையில் அந்தப் பையன் நடத்தியதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/262&oldid=595351" இலிருந்து மீள்விக்கப்பட்டது