பக்கம்:பொன் விலங்கு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 261

போல் ஒரு கவிதை வகுப்பு யாராவது இதுவரை இங்கு நடத்தியிருக்கிறீர்களா?' என்று கல்லூரி நிர்வாகி உங்களைக் கொண்டாடியதை ஒட்டி இங்குள்ள இங்கிலீஷ் டிபார்ட்மென்ட்டைப் பற்றிக் குறைத்துச் சொல்லியிருக்கிறார். பிரின்ஸிபால் அவரிடம் ஒன்றும் எதிர்த்துப் பேசமுடியவில்லை. பேசாமல் தலையை குனிந்துகொண்டு இருந்து விட்டார். நிர்வாகியின் தலை மறைந்ததும் என்னைக் கூப்பிட்டு வயிற்றெரிச்சலையெல்லாம் கொட்டித்தீர்த்துக் கொண்டாயிற்று. நீங்கள் அந்த வகுப்பில் மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தியதனால்தான் இவ்வளவு வம்பும் வந்ததாம். இனிமேல் தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எந்த வகுப்புக்குப் போனாலும் தமிழையே நடத்தச் சொல்லுங்கள். இல்லாத அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் வேண்டாம் என்று என்னிடம் எரிந்து விழுகிறார் பிரின்ஸிபால். நேற்று நிர்வாகியின் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் பேசியதைப் பற்றியும் பிரின்ஸிபாலுக்கு நிறைய மனத்தாங்கல் இருக்கும் போல் தோன்றுகிறது."

இவ்வாறு காசிலிங்கனார் கூறியவற்றையெல்லாம் கேட்டுச் சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் தம்மை அவமதிப்பதாக நினைத்துக்கொள்ளப் போகிறாரே என்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, 'உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி புரொபலர் நான் கவனமாக நடந்து கொள்வேன்' என்று சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் கூறினான். "ஒன்றும் மனத்தில் வைத்துக்கொண்டு வேதனைப்படாதீர்கள். உடனே சொல்லிவிடுவது நல்லதென்று உங்களைக் கூப்பிட்டுச் சொன்னேன்' என்றார் காசிலிங்கனார்.

"பரவாயில்லை? நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்று அவருக்குப் பதில் சொல்லி விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி. பெரிய பட்டங்களைப் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொண்டு நவநாகரிகமாக உடையணிந்து படிப்பும் பதவியும் உண்டாக்கிய கெளரவத்தோடு நடக்கிற முதிய மனிதர்களிடம்கூட இத்தனை பலவீனங்களும் ஆற்றாமைகளும் அசூயைகளும் இருப்பதை எண்ணி உள்ளுர சிரித்துக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/263&oldid=595353" இலிருந்து மீள்விக்கப்பட்டது