பக்கம்:பொன் விலங்கு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பொன் விலங்கு

அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியம் வேறு இப்போது நினைவு வந்தது. அவனும் ஒரு பெரிய கல்லூரியில் மாணவனாக இருந்தவனாதலால், 'வார்டனாக இருப்பதில் உள்ள கஷ்டநஷ்டங்களைச் சிந்தித்து முடிவு சொல்லக்கூட அவகாசமில்லாமல் எப்படி ஒப்புக்கொள்வதென்று தான் தயங்கினான். இப்போது இப்படி வேண்டுகோள் விடுக்கிற இதே பூபதிதான் இண்டர்வியூவின்போது, நீங்கள் மிகவும் இளைஞராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னும் திருமணமாக வில்லை. மாணவ மாணவிகளிடம் நீங்கள் அதிகக் கவனத்தோடு பழகவேண்டும் என்றெல்லாம் சொல்லித் தயங்கினாரென்பதும் அவனுக்கு மறந்துவிடவில்லை.

அவனுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டே பூபதி மேலும் தெளிவாக விளக்க முற்படுகிறவராகத் தம் மனக்கருத்தை அவனுக்கு விவரிக்கலானார்:

'நான் சொல்லுகிறபடி மறுக்காமல் ஒப்புக்கொள்ளுங்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி என்னுடைய மனக்கருத்தை நம்முடைய கல்லூரி முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கூட இன்னும் நான் தெரிவிக்கவில்லை. உங்களைக் கேட்டுக் கொண்டு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும், நானாக ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்துச் செய்தால்தான் உண்டு. நான் வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. இங்கே படிக்கிற ஒவ்வொரு மாணவியையும் என் மகள் பாரதியைப்போலவே அக்கறையும் சிரத்தையும் செலுத்தி வளர்க்க விரும்புவது என் வழக்கம். என் சொந்தப் பிள்ளைகளை வளர்ப்பதுபோல்தான் மாணவ மாணவிகளைப் படிப்பும் பொறுப்பும் உள்ள இளைஞர்களாக உருவாக்கி அனுப்ப விரும்புகிறேன் நான். 'எப்போதும் போல் இருப்பவர்களே இருக்கட்டும் புதிதாக உதவி வார்டன் எதற்கு? என்று முதல்வரே என் அபிப்பிராயத்துக்குத் தடை கூறினாலும் கூறலாம். நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/266&oldid=595359" இலிருந்து மீள்விக்கப்பட்டது